

உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தத் தவறினால் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு கூடுதலாக ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என பரப்பன அக்ரஹாரா சிறைத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், முதல் குற்றவாளியான ஜெயலலி தாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா (2-ம் குற்றவாளி), சுதாகரன் (3-ம் குற்றவாளி), இளவரசி (4-ம் குற்றவாளி) ஆகியோருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதமாக விதித்து தீர்ப்பளித்தார்.
இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும் கடந்த 14-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இதையடுத்து சசிகலா, இளவரசி உள்ளிட்ட மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். எனினும் சசிகலா தரப்பில் இதுவரை அபராத தொகை செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் கூறும்போது, ‘‘குற்றவியல் வழக்கில் தண்டிக் கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சிறையில் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படவில்லை. மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசிக்கும், ஆண் கள் சிறையில் அடைக்கப்பட் டுள்ள சுதாகரனுக்கும் வெள்ளைச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மூவரும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிப்பதுடன், தலா ரூ.10 கோடி அபராதத்தையும் செலுத்த வேண்டும்.
ஒருவேளை சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் இந்த அபராத தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓர் ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். மேலும் அதற்கு அபராதமாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும்’’ என தெரிவித்துள்ளார்.