

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ஆவாஸ் இ பஞ்சாப் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
பாஜகவிலிருந்து விலகிய சித்து, அகாலிதளத்திலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ பர்கத் சிங்குடன் இணைந்து ஆவாஸ் இ பஞ்சாப் என்ற கட்சியை நேற்று தொடங்கினார்.
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் கட்சி தொடங்கியுள்ளார். பஞ்சாப் இழந்த பெருமையை மீட்டெடுப்பதற்காகவும், பஞ்சாபை சீரழித்தவர்களை எதிர்த்துப் போராடவும் கட்சி தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “நமது நாட்டில் நல்ல மனிதர்களை பிரச்சாரத்துக்காக பயன்படுத்திக் கொண்டு, பிறகு வெறும் அலங்காரத்துக்காக வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. பஞ்சாபில் ஒரே குடும்பம்தான் (முதல்வர் பாதலின் குடும்பம்) அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறது. மக்களுக்காகத்தான் அரசாங்கம். ஆனால், பஞ்சாப் அரசு ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது. அரசு அமைத்தபிறகு பாஜக என்னை ஒதுக்கி விட்டது. ஆம் ஆத்மியும் மற்ற கட்சிகளைப் போலத்தான். பஞ்சாபில் வெற்றி பெற்றால் என் மனைவிக்கு அமைச்சர் பதவி தருவதாகக் கூறினார். ஆனால், நான் போட்டியிடக் கூடாது எனக் கேட்டுக் கொண்டனர்” என்றார்.
ஆவாஸ் இ பஞ்சாப் கட்சிக்கு லூதியானாவைச் சேர்ந்த சுயேச்சை எம்எம்ஏக்கள் பல்விந்தர் சிங் பெய்ன்ஸ், சிம்ரஜித் சிங் பெய்ன்ஸ் ஆகியோர் ஆதரவளித்துள்ளனர்.