

தாழ்வான உயரத்தில் பறந்து வரும் எதிரி நாட்டின் எந்தவொரு ஏவுகணையையும் இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் படைத்த இந்தியாவின் அதிநவீன சூப்பர் சோனிக் ஏவுகணை நேற்று வெற்றி கரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
ஒரே மாதத்துக்குள் இரண்டா வது முறையாக ஏவுகணை சோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே உள்ள சாண்டிப்பூரின் ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் 3-வது ஏவு தளத்தில் இருந்து தாக்கும் இலக்காக பிருத்வி ஏவுகனை தாழ்வான உயரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணை சரியாக காலை 10.10 மணிக்கு சாண்டிப்பூரில் இருந்து புறப்பட்டது. அடுத்த 4 நிமிடங்கள் கழித்து வங்கக் கடலில் அப்துல் கலாம் தீவில் நிறைநிறுத்தப்பட் டிருந்த மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணை, பிருத்வி ஏவுகணையின் சமிக்ஞைகளை தனது ரேடாரில் கிரகித்துக் கொண்டு, அதன் பாதையை நோக்கி சீறிப் பாய்ந்தது. சிறிது நேரத்தில் நடுவானில் பிருத்வி ஏவுகணையை இடைமறித்து வான் பாதுகாப்பு ஏவுகணை அழித்தது.
இதுகுறித்து ராணுவ உயரதி காரி கூறும்போது, ‘‘விமானம் போல பல்வேறு உயரங்களில் இடைமறிப்பு ஏவுகணை எப்படி பறந்து செயல்படுகிறது. எதிரி களின் இலக்கை எப்படி துல்லிய மாக தாக்குகிறது என்பதை அறிவதற்காக இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இடைமறிப்பு ஏவுகணை மிக அற்புதமாக இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது’’ என்றார்.
இடைமறிப்பு ஏவுகணை 7.5 மீட்டர் நீளம் கொண்டது. இந்த ஏவுகணையில் வழிகாட்டுதல் தொழில்நுட்பம், கணினி மற்றும் எலெக்ட்ரோ மெக்கானிக்கல் ஆக்டி வேட்டர் உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த இடைமறிப்பு ஏவுகணை எந்த இடத்தில் இருந்தும் பறந்து சென்று, எதிரிகளின் ஏவுகணையை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் படைத்தது. அதற்கான நவீன ரேடார்கள் இதில் பொருத்தப்பட் டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒடிசா கடலோர பகுதியில் இருந்து கடந்த மாதம் 11-ம் தேதி பூமியின் வளிமண்டலத்தில் இருந்து 50 கி.மீ. தூரம் என்ற அதிக உயரத்தில் பறந்து வந்த இலக்கு ஏவுகணையை இடை மறித்து தாக்கி அழிக்கும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நடத்தப்பட்ட ஒரு மாதத்துக்குள் ளாகவே 2-வது முறையாக தற் போது குறைந்த உயரத்தில் இடைமறிப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதே ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு மே 15-ம் தேதி ஒரு சோதனை நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.