

ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் தயக்கம் காட்டியது தெரியவந்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
இந்நிலையில், ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் தயக்கம் காட்டியது தெரியவந்துள்ளது.
நீதித்துறை நடைமுறைப்படி, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்குகளில் ஆஜராகும் நீதிபதி குறித்த அறிவிப்பு முந்தைய நாள் மாலை 5 மணிக்குள் வெளியிடப்படும். ஆனால், வியாழக்கிழமை மாலை 7.30 மணிவளவிலேயே இன்று விசாரணைக்கு வரும் ஜெயலலிதா மனுக்களை விசாரிக்கும் நீதிபதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் தயக்கம் காட்டியதாகவும், எனவே நீதிபதியை உறுதி செய்வதில் உச்ச நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் அதிக மெனக்கிட வேண்டியிந்ததும் அம்பலமாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் ஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரிக்க தயக்கம் காட்டியதால், வேறு வழியின்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதி மதன் பி. லோகூர் உள்பட 3 பேர் அடங்கிய அமர்வு தாமாகவே முன்வந்து மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
நீதிபதிகள் தயக்கம் ஏன்?
ஜெயலலிதா மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயக்கம் காட்டுவதற்கு இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தாக இருப்பதே காரணம் என கூறப்படுகிறது.
மேலும், ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தமிழகத்தில் சட்டசிக்கலை ஏற்படுத்துவதாலும் நீதிபதிகள் தயக்கம் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி:
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27-ம் தேதி 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா நான்காண்டு சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படது. இதனைத் தொடர்ந்து 4 பேரும் கடந்த 21 நாட்களாக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.