

நாடு முழுவதும் நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை வீசுவதாக பாஜகவினர் கூறி வரும் நிலையில், அவர் 2 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக ஜம்முவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒமர் பேசியதாவது:
தேசிய மாநாட்டு கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. இங்கு மொத்தம் உள்ள 6 இடங்களிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும். மாநிலத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது. ஆனால் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். அப்படியானால் மோடி 2 தொகுதி யில் போட்டியிடுவார் என அறிவித்திருப்பது ஏன்?
கடந்த 2004-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவான நிலை இருப்பதாகக் கூறினர். அத்துடன் `இந்தியா ஒளிர்கிறது' என்ற வாசகங் களுடன் விளம்பரம் செய்தனர். ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான் ஆட்சியைப் பிடித்தது. மீண்டும் 2009-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போதும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வியடையும் என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும் கூறினர்.
ஆனால் அதுவும் நடக்கவில்லை. அந்த வரிசையில் இந்த தடவையும் அவர்களது கணிப்பு தவறு என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும். தொகுதிகளை ஒதுக்குவதில்கூட பாஜகவில் குளறுபடி நிலவுகிறது. இதுவரை நடைபெற்ற தேர்தலில் ஒரே ஒரு முறை மட்டுமே அலை வீசியது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்று ராஜீவ் காந்தி பிரதமரானார் என்றார் ஒமர்.