

காங்கிரஸின் மூன்றாவது வேட்பாளர் பட்டியலில் அமைச்சர்கள் உள்பட 58 பேர் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் மதுசூதன் மிஸ்திரி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிஹார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா, ஒடிசா, அசாம், சிக்கிம் , கோவா ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்- கிழக்கு டெல்லி, முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கன்- புதுடெல்லி, மத்திய அமைச்சர்கள் கபில் சிபல்- சாந்தினி சௌக், கிருஷ்ணா தீரத் -வடகிழக்கு டெல்லி தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகின்றனர். டெல்லியில் இன்னும் இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
ராஜஸ்தானில் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் அஜ்மீரிலும் டாக்டர்சி.பி.ஜோஷி ஊரக ஜெய்ப்பூரிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரரான முகம்மது அசாருதீன் உத்தரப் பிரதேசத்தின் முராதாபாதில் இருந்து ராஜஸ்தானின் சவாய் மாதேபூர் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரின் மஹாசமுந்த் தொகுதியில் முன்னாள் முதல்வரான அஜீத் ஜோகி போட்டியிடுகிறார். அர்ஜுன் சிங்கின் மகன் அஜய் சிங் மத்தியப் பிரதேசத்தின் சத்னா தொகுதி வேட்பாளராகி உள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய சுரேஷ் கல்மாதி, அசோக் சவாண் ஆகியோருக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. கல்மாதியின் புனே தொகுதியில் விஸ்வஜித் கதமிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.