

பண மதிப்பு நீக்க நடவடிக் கைக்குப் பிறகு, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என்பதை தெரிவிக்க மத்திய அரசு தயங்குவது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். பொதுமக்கள் தங்கள் கையிருப்பில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.
கறுப்புப் பணம், போலி ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என பிரதமர் தெரிவித்தார். ஆனால் இந்த காலக்கெடு முடிந்தபோதும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என அரசு தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாரம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என்பதை தெரிவிக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? இது அரசின் திறமையின்மையா அல்லது சட்டவிரோத செயலுக்கு அரசு துணை நிற்கிறதா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.