

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எனது தொகுதியில் நிறுத்த கட்சி முடிவு செய்தால், அவருக்காக தொகுதியை விட்டுத்தருவதில் மகிழ்ச்சி என்று வடோதரா தொகுதியின் தற்போதைய எம்.பி. பாலகிருஷ்ண சுக்லா கூறினார்.
“நரேந்திர மோடி எனது அரசியல் குரு. நகர மேயராக இருந்த என்னை மக்களவை தேர்தலில் போட்டியிடுமாறு 2009-ல் மோடிதான் ஊக்கப்படுத்தினார். அவருக்காக எனது தொகுதியை விட்டுத் தருவதில் மகிழ்ச்சி. இதை கட்சித் தலைமையிடம் கூறிவிட்டேன்” என்றார் அவர். கடந்த 2009 மக்களவை தேர்தலில் வடோதரா தொகுதியில் பாஜக வேட்பாளர் பாலகிருஷ்ண சுக்லா 1.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு முன் இத்தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜதபன் தாக்கர் 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் நரேந்திர மோடி வடோதராவில் போட்டியிட வேண்டும் என்று நகர பாஜக தலைவர் பரத் டாங்கர் வேண்டு கோள் விடுத்தார். இதனால் குஜராத்தில் பாஜகவினர் உற்சாகம் அடைவார்கள். வெற்றி வாய்ப்பும் அதிகரிக்கும்” என்றார் அவர்.
நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என்று பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இத்தொகுதியின் தற்போதைய எம்.பி.யான கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை கான்பூரில் போட்டியிடு மாறு கட்சி கூறியுள்ளது.
இந்நிலையில், “மோடி சொந்த மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்பதே குஜராத் மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் விருப்பம். இதை கட்சி தலைமையிடம் வலியுறுத்துவோம்” என்று மாநில பாஜக கூறியுள்ளது. மேலும் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, காந்தி நகர் தொகுதியில் போட்டியிடவும் பரிந்துரை செய்துள்ளது.