10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களுக்கு தடை: சட்ட விதிகளை மீறிவிட்டது தேசிய பசுமை தீர்ப்பாயம் - மத்திய அரசு அறிக்கை தாக்கல்

10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களுக்கு தடை: சட்ட விதிகளை மீறிவிட்டது தேசிய பசுமை தீர்ப்பாயம் - மத்திய அரசு அறிக்கை தாக்கல்
Updated on
1 min read

டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது சட்ட விதிமீறல் என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை இயக்கக்கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2016 நவம்பர் 26-ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த ஜனவரியில் மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் ஸ்வந்தர் குமாரிடம் மத்திய கனரக ஆலை அமைச்சகம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

வாகனங்களின் காலாவதி குறித்து மத்திய அரசு மட்டுமே முடிவெடுக்க முடியும். இந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பழைய டீசல் வாகனங்களுக்கு தடை விதித்தது சட்ட விதிமீறல் ஆகும். மோட்டார் வாகன சட்ட விதிகளைத் தீர்ப்பாயம் மீறிவிட்டது.

பழைய வாகனங்களை இயக்க தடை விதித்திருப்பதால் ஏழை ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து தீர்ப்பாயம் தவறாக கணக்கிட்டுள்ளது. டெல்லியை ஒட்டியுள்ள ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஓடும் வாகனங்களும் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது தவறு. டெல்லியை மட்டும் கணக்கில் எடுத்தால் வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

டீசல் வாகனங்கள் மட்டுமே காற்று மாசுக்கு காரணம் என்று கூறுவதை ஏற்கமுடியாது. டீசல் வாகனங்களைவிட பெட்ரோல் வாகனங்கள் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமாக கரியமிலவாயுவை வெளியிடு கின்றன.

வாகனப்போக்குவரத்து தொடர் பாக டெல்லி அரசு ஒற்றைப்படை, இரட்டைப்படை திட்டத்தைச் செயல்படுத்தியது. இதனால் காற்று மாசு துளியும் குறையவில்லை என்பது மாசு கட்டுப்பாட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்தத் திட்டம் தேவையற்றது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in