

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் காவலர் ஒருவர் குடல் பிரச்சினை காரணமாக, டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் அனுமதிக்கப்பட்டார். இவர் 13 லட்சம் ரூபாய் மருத்துவமனை கட்டணத்தைப் பாக்கி வைத்துள்ள தாக கூறப்படுகிறது. இதனால் நோயாளியை விடுவிக்க மருத்துவ மனை நிர்வாகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து நோயாளியின் மகன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “எனது தந்தைக்கு மருத்துவமனை நிர்வாகம் சரியான சிகிச்சை தரவில்லை. இதனால் அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினேன். ஆனால் அவர்கள் விடுவிக்கவில்லை” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி விபின் சங்கி தலைமயிலான அமர்வு நேற்று விசாரித்து, “சிகிச்சை கட்டணத்தைச் செலுத்தவில்லை எனக் கூறி, நோயாளியை மருத்துவமனை நிர்வாகம் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொள்ள முடியாது. உடனடியாக நோயாளியை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.