Published : 12 Nov 2013 12:00 AM
Last Updated : 12 Nov 2013 12:00 AM

சத்தீஸ்கர் முதல் கட்டத் தேர்தல்: நக்ஸல் பகுதிகளில் 67% வாக்குப் பதிவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார், ராஜ்நந்தகான் பகுதியில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின.

நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் உயிரிழந்தார். முன்னதாக தேர்தலை புறக்கணிக்கும்படி நக்ஸலைட்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

தண்டேவாடா மாவட்டம் கடேகல்யான் பகுதியில் வாக்குப் பதிவு முடிவடைந்த பின்பு வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்த தேர்தல் அலுவலர்கள் மீது நக்ஸலைட்டுகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினர். இதில் சி.ஆர்.பி.எப்.பின 18-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர் பி.ஜோசப் உயிரிழந்தார்.

மங்கனார், குவாகோண்டா, முர்கினார் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து மொத்தம் 10 வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றினர். காங்கேர் பகுதியில் நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.

“மொத்தம் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன” என்று இணைத் தேர்தல் அலுவலர் டி.டி.சிங் கூறினார். முதல்கட்டத் தேர்தலில் சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், அமைச்சர்கள் கேதார் காஷ்யப், லதா உசெந்தி, விக்ரம் உசெந்தி ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளிலும் வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது.

நக்ஸலைட்கள் எதிர்ப்பு

தேர்தலையொட்டி 18 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார், ராஜ்நந்தகான் பகுதியின் 13 மாவட்டங்களில் மாலை 3 மணியுடன் வாக்குப் பதிவுகள் முடிவடைந்தன. ராஜ்நந்தகான் பகுதியில் உள்ள மேலும் 5 தொகுதிகளில் மாலை 5 மணியுடன் தேர்தல் முடிவடைந்தது.

நக்ஸலைட்டுகளின் கடும் எதிர்ப்பு காரணமாக காங்கேர் மாவட்டத்தில் உள்ள துர்காபூர், சித்ராம் வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடத்த முடியவில்லை. அந்தப் பகுதிக்கு தேர்தல் அலுவலர்களால் செல்ல முடியாததே இதற்கு காரணம். முன்னதாக துர்காபூருக்குச் சென்று கொண்டிருந்த தேர்தல் அலுவலர்களின் வாகனத்தை வழிமறித்து வாக்குப் பதிவு இயந்திரங்களை நக்ஸலைட்டுகள் சேதப்படுத்தினர்.

நக்ஸல் அச்சுறுத்தல் காரணமாக பனிதோபிர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 2 வாக்குச் சாவடிகள், குதேபேடா பகுதிக்கு மாற்றப்பட்டன. தண்டேவாடா, பிஜாபூர் மாவட்டங்களில் நக்ஸலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

2-ம் கட்ட வாக்குப் பதிவு

ராய்ப்பூர், பிலாஸ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வரும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 56 ஆயிரத்து 200 துணை ராணுவப் படை வீரர்களை மத்திய அரசு, சத்தீஸ்கர் மாநிலத்துக்கு அனுப்பியுள்ளது. அந்த மாநிலத்தில் ஏற்கெனவே 40 ஆயிரம் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x