

ஜுலை 15ஆம் தேதி ஜாமீனில் வெளிவரவிருக்கும் ஹர்திக் படேலை வரவேற்க குஜாராத் படேல் சமூகத்தினர் பல சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
2015 ஜூலை மாதம் ஹர்திக் படேல் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் படேல்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தைத் தொடங்கினார், ஆனால் இந்தப் போராட்டம் வன்முறையில் முடிந்தது.
இதனையடுத்து அக்டோபர் 2015-ல் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டார். இவர் மீது 2 தேசத் துரோக வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதனையடுத்து ஹர்திக் படேலுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
ஜாமீனில் வெளிவந்ததும் ஹர்திக் படேலின் திட்டங்கள்:
ஜாமீனில் வெளிவந்தவுடன் ஹர்திக் படேல் பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிடவுள்ளார். படேல் சமூகத்தின் வழிப்பாட்டுத் தளங்களில் வழிபடவுள்ளார். படேல் சமூகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.
சூரத் சிறையிலிருந்து ஹர்திக் படேல் வெளியே வரும்போது வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்த சிறுமிகள் அவரை வரவேற்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து டைமண் சாலையில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஹர்திக் படேல் மாலையிடுவார்.
படிதார் அனாமட் அண்டோலன் சமிதியின் செய்தி தொடர்பாளர் வருண் படேல் கூறும் போது, "அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் சூரத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளோம். வெள்ளிக்கிழமை மாலை அஹமதாபாத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து தனது சொந்த ஊரான விரம்கம் செல்ல விருக்கிறார்" என்றார்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஜுலை 17 ஆம் தேதி குஜராத்தை விட்டு வெளியேறி, நீதிமன்ற இயக்ககத்திடம் அடுத்த ஆறு மாதத்திற்கான திட்டங்கள் பற்றி கூறுவார்" என்றார்.