

மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தால், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 3 மகன்களுடன் தாயும் சேர்ந்து தற்கொலை செய்து இறந்த சோக சம்பவம், ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், அமரபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் பூ லட்சுமி (45). இவரின் கணவர் விவசாயக் கூலித் தொழிலாளி. இவர்களுக்கு பிரபு பிரகாஷ் (25), அனில் குமார் (20), பிரேம் குமார் (15) என 3 மகன்கள்.
மகன்கள் மூன்று பேருக்கும் சிறுநீரக பிரச்சினை இருந்தது. அனில் குமார், பிரேம் குமார் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் 2 சிறுநீரகங்களும் பழுதாகி விட்டன. உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே இருவரும் உயிர் பிழைக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தன்வசம் இருந்த அரை ஏக்கர் நிலத்தையும் விற்று இவர்களின் மருத்துவத்திற்கு பூ லட்சுமி செலவு செய்தார். கணவரும் வேலை அதிக வருமானம் ஈட்டக் கூடிய வேறு கிடைக்காமல் விவசாய கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
இதனால் மனம் உடைந்த பூ லட்சுமி மற்றும் 3 மகன்களும் நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தனர். அதன்படி கிராமத்தில் அனைவரும் தூங்கிய பின்னர் நள்ளிரவு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சடலங்கள் அடித்துச் செல்லா மல் இருக்க அனைவரும் ஒரே கயிற்றை தங்களது இடுப்பில் கட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டனர். நேற்று காலை அந்த வழியாக சென்ற சிலர் 4 சடலங்களும் கரை ஒதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து போலீஸா ருக்கும், பூ லட்சுமியின் கண வருக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் போலீஸார் வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காகிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.