

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது சீனப் பயணத்தை ஒருநாள் முன்னதாக முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பினார்.
ஜேட்லி தனது 5 நாள் சீனப் பயணத்தை கடந்த 23-ம் தேதி தொடங்கினார். பத்தாயிரம் கோடி டாலர் முதலீட்டில் தொடங்கப்பட் டுள்ள ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏஐஐபி) முதலாவது ஆளுநர் குழு கூட்டத் தில் பங்கேற்பதே இப்பயணத்தின் முதன்மையான நோக்கம் ஆகும்.
சீன நிதியமைச்சர் லூ ஜிவேயை ஜேட்லி திங்கள்கிழமை (நேற்று) சந்திக்க திட்டமிருந்தார். ஆனால் இந்த சந்திப்பு நேற்று முன்தினமே நிகழ்ந்து விட்டது. சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணைய தலைவர், சீன மக்கள் வங்கியின் தலைவர் ஆகியோரை ஜேட்லி சந்திப்பதும் 1 நாள் முன்ன தாக மாற்றி அமைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஜேட்லி டெல்லி திரும்பும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜேட்லி தனது பயணத்தை முன் கூட்டியே முடித்துக் கொண்டதற் கான காரணம் தெரிவிக்கப் படவில்லை. ஜேட்லி, முதன்மை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன், பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸுக்கு எதிராக சுவாமி தாக்குதல் நடத்தி வருவது ஜேட்லியை வருத்தம் அடையச் செய்துள்ளது. இத்தாக்குதலை எதிர்கொள்ளவே அவர் தனது பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.