

ஏர் இந்தியா விமான நிறு வனத்தின் மேலாளரை தனது செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட், அவரது சட்டையையும் கிழித்துள்ளார். டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா தரப்பில் கூறப்படும் விவரம்:
ஏர் இந்தியா விமானத்தில் சொகுசு வகுப்பில் செல்வதற்காக எம்.பி. கெய்க்வாட் டிக்கெட் பெற்றுள்ளார். இந்த டிக்கெட், குறிப்பிட்ட தேதி என்றில்லாமல் எந்தவொரு தேதியிலும் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடியதாகும்.
ஆனால், கெய்க்வாட் நேற்று மாலை புனேவிலிருந்து டெல்லிக்கு காலையில் 7.35 மணிக்கு செல்லும் விமானத்தில் ஏறினார். இந்த விமானம் சாதாரண ரக இருக்கை வசதி கொண்டதாகும். இதில் சொகுசு இருக்கைகள் இல்லையே என்று சத்தம்போட்டு விமான ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார்.
விமானம் டெல்லியை வந்தடைந்த பிறகும் அதி லிருந்து இறங்கவில்லை. இதைக் கண்டதும் அவரை சமாதானம் செய்து அனுப்பிவைக்க பொறுப்பில் இருந்த விமான நிலைய மேலாளர் சிவகுமார் (60) முன்வந்தார். அப்போது அவரை கெய்க்வாட் கடுமையாக தாக்கினார்.
இவ்வாறு ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விரைவில் அறிக்கை தாக்கல்செய்வதற்காக கமிட்டி ஒன்றையும் ஏர் இந்தியா அமைத்துள்ளது.
இதனிடையே செருப்பால் ஏர் இந்தியா ஊழியரை அடித்ததை கெய்க்வாட்டும் ஒப்புக்கொண்டுள்ளார்.
‘யார் இந்த எம்.பி, பிரதமர் மோடியிடம் புகார் செய்வேன் என்று அதட்டலாக பேசவே அவரை அடித்தேன், நான் அணிந்திருந்த செருப்பைக் கொண்டு 25 தடவை அடித்தேன். என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு மவுனமாக இருப்பதற்கு நான் பாஜக எம்.பி அல்ல. இந்த சம்பவம் பற்றி மன்னிப்பு கோரமாட்டேன். நானும் மக்களவைத் தலைவரிடம் புகார் செய்வேன்’ என்று கெய்க்வாட் தெரிவித்தார்.