

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எடப்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வதி (19). சிறுவயதிலே தந்தையை இழந்த இவர் கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள அல் ஹூமர் நர்சிங் கல்லூரியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். முதலாமாண்டு மாணவி என்பதால் அவரது சீனியர் மாணவிகள் அஸ்வதியை தொடர்ந்து ராகிங் செய்து வந்துள்ளனர்.
கடந்த மே மாதம் 9-ம் தேதி இரவு சீனியர் மாணவிகள், அஸ்வதியின் வாயில் பினாயிலை ஊற்றி குடிக்க வைத்துள்ளனர். இதனால் உடல்நிலை பாதிக்கப் பட்ட அஸ்வதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 5 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அஸ்வதியின் உடல்நிலை தேறவில்லை. இதையடுத்து அவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தற்போது அபாய கட்டத்தை தாண்டினாலும் பினாயில் குடித்த தால், அவரது உணவு குழாய் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத் துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ஷபி அஸ்வதியின் பெற்றோர் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து அஸ்வதி ராகிங் செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய தலைவர் ஆகியோருக்கு புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் கோழிகோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிகுமாரை சந்தித்து புகார் மனு அளித்தார். சசிகுமார் குல்பர்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயபிரகாசிடம் பேசியதை தொடர்ந்து இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.