

நக்ஸல் பிரச்சினைகளை சமாளிக்க, 13 புதிய ஆயுதப் படை போலீஸ் பிரிவுகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நக்ஸலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், 12 இந்திய ரிசர்வ் படைப் பிரிவுகளை உருவாக்கும் முடிவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதில், 4 படைப் பிரிவுகள் சத்தீஸ்கர் மாவட்டத்திலும், ஜார்க் கண்ட், ஒடிசா மாநிலங்களில் தலா 3 படைப்பிரிவுகளும், மகா ராஷ்டிராவில் 2 படைப் பிரிவுகளும் செயல்படும்.
இப்படைப் பிரிவுகளில் உள்ள காவலர் நிலையிலான பணியிடங்களில், 75 சதவீதம், நக்ஸல் பாதித்த மாநிலங்களில் வசிப்பவர்களால் நிரப்பப்படும். உள்ளூர் இளைஞர்களை பணியில் அமர்த்துவதற்கு வசதியாக, கல்வி மற்றும் வயது உள்ளிட்ட தகுதிகளை தேவைக்கேற்ப தளர்த்திக்கொள்ளவும் அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது.
12 பிரிவுகளைத் தவிர, சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதிக்கென்றே தனியாக, ‘பஸ்தாரியா பட்டாலியன்’ உரு வாக்க மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படைக்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இப்படைப் பிரிவில் அனைத்து காவலர் பணியிடங்களும், சுக்மா, தாண்டேவாடா, நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
நக்ஸல் தடுப்பு நடவடிக்கை களுக்கு உள்ளூர் இளைஞர்களை பயன்படுத்துவதன் மூலம், பின்தங்கிய பகுதிகளில் வேலை யில்லா திண்டாட்டத்துக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும். அது மட்டுமன்றி, நக்ஸல்களைப் பற்றி நன்கறிந்த உள்ளூர் பழங்குடி மக்களுடன் பாதுகாப்புப் படை யினர் செயல்படும் போது, உளவு தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
மேலும் மொழிப் பிரச்சினை, வழிப் பிரச்சினை போன்றவை உட்பட பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ளதால், உள்ளூர் பழங்குடியின இளைஞர்களை படைப் பிரிவில் சேர்க்க அமைச்சரவைக் குழு முடிவு செய்தது.