

முன்னாள் பிரதமர் நேரு குடும்பத் தினரின் கோட்டையாக விளங்கும் அமேதி தொகுதியில் உள்ளூர் மன்னரின் 2 மனைவிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான 5-ம் கட்ட தேர்தலில் அமேதி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் மாநிலங்களவை உறுப்பினரும் (அசாம்) அமேதி மன்னர் குடும்ப வாரிசான சஞ்சய் சிங்கின் 2 மனைவிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சஞ்சய் சிங்கின் முதல் மனைவி யான கரிமா சிங் (61) பாஜக சார்பிலும் இப்போதைய மனைவி யும் முன்னாள் பேட்மின்டன் வீராங் கனையுமான அமிதா சிங் (54) காங்கிரஸ் சார்பிலும் போட்டியிடு கின்றனர்.
கணவருடனான கருத்து வேறு பாடு காரணமாக கரிமா சிங் அமேதியை விட்டு வெளியேறி வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, தனது மகன் மற்றும் 2 மகள் களுடன் கரிமா அரண்மனைக்கு திரும்பினார். இவருக்கு பொது மக்கள் மத்தியில் அவ்வளவாக செல்வாக்கு இல்லை.
அதேநேரம், கடந்த 2012 பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அமிதா சிங், அமைச்சர் காயத்ரி பிரசாத் பிரஜாபதியிடம் தோற்றார். ஆனாலும் தொகுதி மக்களிடையே நன்கு பரிச்சயமானவராக விளங்கு கிறார்.
இந்நிலையில், இந்த இருவருமே மன்னர் குடும்பத்து வாரிசு என உரிமை கோரி வாக்கு சேகரித்து வருகின்றனர். குறிப்பாக, தன்னுடைய கணவர் மோசடியாக விவாகரத்து செய்ததாகக் கூறி, கரிமா சிங் வாக்காளர்களிடையே நீதி கேட்டு வாக்கு சேகரித்து வருகிறார். அதாவது வேறு ஒரு பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இவர்தான் கரிமா எனக் கூறி விவாகரத்து பெற்றதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.
இவருக்கு ஆதரவாக மஹிமா மற்றும் ஷைவ்யா சிங் மற்றும் மருமகன் ஷம்பவி சிங் ஆகியோர் வாக்கு சேகரித்து வருகின்றனர். அதேநேரம், கரிமா சிங்கின் மகன் ஆனந்த் விக்ரம் சிங் இதே தொகுதியில் சுயேச்சையாக மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால், தனது தாயின் மனு நிராகரிக்கப்பட்டால் அதை சமாளிக்கவே ஆனந்த் போட்டியிடுகிறார் என பாஜக பிரமுகர் அபிஷேக் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதுபோல தான்தான் உண்மை யான ராணி என்று உரிமை கோரி வாக்கு சேகரித்து வருகிறார் அமிதா சிங். இதனால் வாக்காளர்கள் குழம்பிப் போய் உள்ளனர். அதே நேரம், மன்னர் குடும்பத்தின் கட்டளைக்காக காத்திருப்பதாகவும் வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.