

ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை பறிக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சிப்பதாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாப், கோவா மாநிலங்களில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கேஜ்ரிவால் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை பறிக்க அவர் திட்டமிடுகிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் கட்சி அந்தஸ்தை ரத்து செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித் துறை பரிந்துரைத்து உள்ளது. இவ்விரு மாநிலங்களிலும் நடக்கும் தேர்தலில் ஆம் ஆத்மியால் தமக்கு தோல்வி ஏற்படுவதை தவிர்க்க மோடி கையாளும் மோசமான தந்திரம் இது.
தேர்தலுக்கு 24 மணி நேரம் முன்பாக வெற்றி வாய்ப்புள்ள கட்சியின் அங்கீகாரத்தை பறிக்க முயற்சி செய்கிறார் சர்வாதிகாரி மோடி. இது மோசமான தந்திரம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ரூ. 27 கோடிக்கு மேல் பெற்ற நன்கொடை தொடர்பாக ஆம் ஆத்மி தாக்கல் செய்த தணிக்கை அறிக்கை பொய்யானது, ஜோடிக்கப்பட்டது என கூறி அந்த கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித்துறை நேற்று முன்தினம் பரிந்துரைத்ததாக செய்திகள் வெளியாகின.