

அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் கட்சியான ஆம் ஆத்மி வேட்பாளர்கள் மீது ஒரு செய்தி இணையதளம் நடத்திய ‘ஸ்டிங் ஆப்பரேஷன்’ சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இது பொய்யாக புனையப்பட்டது என வெள்ளிக்கிழமை அதன் தலைவர்கள் புகார் கூறினர்.
இதுபற்றி ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், "அந்த சிடியின் நகலை சோதனை செய்து, உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்.
இதற்காக, முழு சிடியின் நகலை கேட்டு கால அவகாசம் தந்தபிறகும், அதன் தலைமை நிர்வாகி தர மறுக்கிறார். அதை, வெட்டி, மாற்றி வெளியிடுவதற்கு, இது ஒன்றும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி அல்ல. எனவே, அது கண்டிப்பாக பொய்யான சிடியாக இருக்கும் எனக் கருதுகிறோம்" என தெரிவித்தார்.
டெல்லியிலுள்ள ‘மீடியா சர்கார்’ எனும் செய்தி இணையதளம் நடத்திய இந்த ஸ்டிங் ஆப்ரேஷனில் டெல்லியின் ஆர்.கே.புரம் தொகுதி வேட்பாளரான ஷாசியா இல்மி மாலீக் சிக்கியிருக்கிறார்.
அதில், எங்கிருந்து நிதி கிடைக்கிறது என கவலைப்படாமல் அதை ஏற்றுக்கொள்ள சம்மதிப்பதாகக் காட்டப்படுகிறது. இதற்கு ஈடாக ரியல் எஸ்டேட் விவகாரங்களை கட்ட பஞ்சாயத்து செய்து முடித்து தருவதாக அவர் உறுதி அளிப்பது போன்ற காட்சிகள் அமைந்துள்ளன.
இதுபற்றி மீடியா சர்காரின் தலைமை நிர்வாகியும் பத்திரிகையாளருமான அனு
ரஞ்சன் ஜா கூறியதாவது:
"சிடியை ஒப்படைப்பதற்கு எனக்கு காலஅவகாசம் தர இவர்கள் யார்? மேலும் அந்த சிடியில் சிக்கியுள்ளவர்களிடமே நான் எப்படி அதை ஒப்படைக்க முடியும்? முறையாக விசாரிக்கும் அதிகாரம் பெற்ற ஒரு அரசு அமைப்பிடமே அதைத் தருவேன்.
அந்த வகையில், மத்திய தேர்தல் ஆணையத்திடம் விசாரிக்க கோரும் புகாருடன் சிடியை ஒப்படைக்க இருக்கிறேன்" என தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த புகாரினால் தாம் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளத் தயாராக இருப்பதாக ஷாசியா அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எனினும், ஷாசியா மீதான புகார் நிரூபிக்கப்பட்ட பிறகே அவருக்குப் பதில் வேறு வேட்பாளர் நியமிக்கப்படுவார் என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.