Published : 23 Mar 2017 09:48 AM
Last Updated : 23 Mar 2017 09:48 AM

நாடாளுமன்ற துளிகள்: அணுமின் உற்பத்தி 3 மடங்கு அதிகரிக்கும்

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில் விவரம்:

1,400 ஐஏஎஸ், 900 ஐபிஎஸ் பற்றாக்குறை

பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்: நாட்டில் மொத்தம் 6,396 ஐஏஎஸ் அதிகாரி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 4,926 அதிகாரிகளே உள்ளனர். எனவே 1470 ஐஏஎஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் பிஹாரில் அதிகபட்சமாக 128 காலியிடங்களும் இதையடுத்து உ.பி.யில் 117, மேற்கு வங்கத்தில் 101 காலியிடங்களும் உள்ளன.இதுபோல் நாட்டில் மொத்தம் 4,802 ஐபிஎஸ் அதிகாரி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,894 அதிகாரிகளே உள்ளனர். எனவே, 908 ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் அதிகபட்சமாக உ.பி.யில் 114 காலியிடங்களும், இதையடுத்து மேற்கு வங்கத்தில் 88, ஒடிசாவில் 79, கர்நாடகாவில் 72 காலியிடங்களும் உள்ளன.

இதுபோல் நாட்டில் 3,157 ஐஎப்எஸ் (இந்திய வனத்துறை) பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 2,597 அதிகாரிகளே உள்ளனர். எனவே, 560 பணியிடங்கள் காலியாக உள்ளன.இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 46 காலியிடங்களும், தமிழ்நாடு, ம.பி., ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 45 காலியிடங்களும் உள்ளன. ஐஏஎஸ் அதிகாரிகளின் வருடாந்திர தேர்வு எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளாக 180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மரண தண்டனை ரத்து?

உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர்: பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் தவிர மற்ற அனைத்து குற்றங்களுக்கும் மரண தண்டனையை ரத்து செய்யலாம் என சட்ட ஆணையம் தனது 262-வது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைகள், அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையின் பொதுப்பட்டியலில் இருப்பதால், அனைத்து மாநிலங்களின் கருத்துகளைப் பெறுவதற்காக சட்ட ஆணையத்தின் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அணுமின் உற்பத்தி 3 மடங்கு அதிகரிக்கும்

இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்: நாட்டில் புதிய அணுமின் நிலையப் பணிகள் மிக விரைவாக நடந்து வருகின்றன. 2014-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, நாட்டில் அணுமின் உற்பத்தி 4,780 மெகாவாட் ஆக இருந்தது. இதை 10 ஆண்டுகளில் (2024-ல்) 3 மடங்கு (சுமார் 15 ஆயிரம் மெகாவாட்) அதிகரிக்க இலக்கு நிர்ணயித்தோம். இந்த இலக்கை எட்டுவோம் என நம்புகிறோம். என்றாலும் அணுமின் உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் போதிய அளவு யுரேனியம் கிடைப்பது அவசியம் ஆகும். பிஹார் மற்றும் மேகாலயாவில் யுரேனியம் எடுப்பது உட்ட பல்வேறு வழிகளில் யுரேனியம் பெற மத்திய அரசு முயன்று வருகிறது. தோரியத்தை பயன்படுத்தி சிறிய அளவில் மின்னுற்பத்தி செய்யும் அனுபவத்தை நாம் பெற்றுள்ளோம். இதை பெரிய அளவில் மேற்கொள்வது குறித்து பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x