

நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் ஊதியம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படும் என்று அந்தத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக டெல்லியில் நிருபர்களிடம் ஞாயிற்றுக் கிழமை அவர் கூறியதாவது:
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பயனாளிகளுக்கான ஊதிய நிர்ணயம், நுகர்வோர் குறியீட்டு எண்ணுடன் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆண்டுதோறும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 100 நாள் வேலைத்திட்ட ஊதியமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக் கான விலை நிர்ணயப்படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊதியம் உயர்த்தப்படும்.
இதற்கான அறிவிக்கை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த வார இறுதியில் தாக்கல் செய்யப்படும்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.