

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, 2008-ல் நடந்த நில வர்த்தக பேரத்தில் சட்டவிரோதமாக ரூ.50 கோடி லாபம் ஈட்டி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது (2008-ல்) ராபர்ட் வதேரா ஏக்கர் கணக்கில் குறைவான விலையில் நிலம் வாங்கி அதை அதிக விலைக்கு விற்றதாக புகார் எழுந் தது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத் தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில், 2014-ல் ஆட்சிக்கு வந்த முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு, இந்த நில பேர ஊழல் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.என்.திங்ரா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
இக்குழு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இதனிடையே, இந்தக் குழுவுக்கு எதிராக பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஹூடா ஒரு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இக்குழுவின் அறிக்கையை வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இது தொடர் பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு திங்ரா அறிக் கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. இதையடுத்து, ஹரியாணா அரசு இந்த அறிக் கையை கடந்த வாரம் சமர்ப்பித்தது.இந்த அறிக்கையில் உள்ள சில அம்சங்களை முன்னணி நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில், “ஓங்காரேஸ்வரர் பிராப்பர்டிஸ் டிஎல்எப் ஆகிய நிறுவனங்களுடன் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் செய்து கொண்ட நில பரிவர்த்தனை விவரங்கள் திங்ரா குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
வதேரா மற்றும் அவரது நிறு வனத்தால் வாங்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட சொத்துகள் பற்றி திங்ரா குழு ஆய்வு செய்துள்ளது. வதேரா நிறுவனம் பயனடைவதற்காக, நில வர்த்தகர்கள் மற்றும் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான அரசுக்கு இடையே ரகசிய உறவு இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஓங்காரேஸ்வரர் பிராப்பர்டிஸ் நிறுவனத்திடமிருந்து வதேராவின் ஸ்கைலைட் நிறுவனத்துக்கு நிலம் கைமாறி உள்ளது. இதற்கு வதோராவின் ஸ்கைலைட் பணம் செலுத்த வில்லை. பின்னர் அந்த நிலத்தின் பயன்பாடு மாற்றி அமைக்கப்பட்டு டிஎல்எப் நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஸ்கைலைட் நிறுவனம் ரூ.50.5 கோடி லாபம் ஈட்டி உள்ளது. பின்னர் இந்த தொகையைக் கொண்டு மீதம் உள்ள சொத்துகள் வாங்கி விற்கப் பட்டிருக்கலாம். எனவே, இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அறிக்கை கூறுகிறது.
மேலும் வதேரா நிறுவனம் ஈட்டிய லாபத்தில் பிரியங்கா காந்தி பரிதாபாத் மாவட்டம் அமிபூரில் 5 ஏக்கர் விவசாய நிலம் வாங்கி உள்ளதாகவும் திங்ரா அறிக்கை கூறுகிறது” என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ராபர்ட் வதேரா, பிரயங்கா மறுப்பு
இதுகுறித்து ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் கூறும்போது, “எனது கட்சிக்காரரோ அவரது நிறுவனமோ எந்தத் தவறும் செய்யவில்லை. எந்த சட்டத்தையும் மீறவில்லை” என்றார்.
இதுபோல பிரியங்கா வெளி யிட்ட அறிக்கையில், “எனது கணவரோ அல்லது அவரது நிறு வனத்திடமிருந்து பணம் பெற்று எனது பெயரில் நிலம் வாங்க வில்லை. எனது பாட்டி இந்திரா காந்தி மூலம் கிடைத்த சொத்தில் கிடைத்த வாடகை வருமானத்தின் மூலம் நிலம் வாங்கினேன்” என கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டார் கூறும்போது, “நீதிபதி திங்ரா குழு அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்தக் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல் கசிந்ததாக காங்கிரஸ் கட்சி கூறுவதில் உண்மை இல்லை” என்றார்.