விடை பெற்றது மிக்-21 போர் விமானம்

விடை பெற்றது மிக்-21 போர் விமானம்
Updated on
1 min read

பாகிஸ்தானுடனான போரில் முக்கியப் பங்கு வகித்த மிக்-21 எப்.எல். ரக போர் விமானம் புதன்கிழமை இறுதியாக விண்ணில் பறந்து சேவையில் இருந்து விடை பெற்றது.

மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னபூர் மாவட்டம் கலைகுந்தா விமானப்படை தளத்தில் இது தொடர்பாக புதன்கிழமை நடை பெற்ற நிகழ்ச்சியில், 4 மிக் ரக விமானங்கள் விண்ணில் பறந்தன. பயிற்சி சதுக்கத்திலிருந்து ஒரு விமானம் வெளியே நகர்த்தப் பட்டது. மிக் ரக விமானத்துக்கு ஓய்வு அளிக்கும் விண்ணப்பத்தை (படிவம் 700) விமானப்படை தலை மைத் தளபதியிடம் இளம் பைலட் லெப்டினன்ட் எல்.நாகராஜன் வழங்கினார்.

இந்த விமானம் நீண்டகாலமாக விமானப்படையின் முதுகெலும்பாக விளங்கியது என விமானப்படை தளபதி புகழாரம் சூட்டினார்.

இதுகுறித்து இந்திய விமானப் படை தளபதி என்ஏகே பிரௌனி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மிக்-21 ரக போர் விமானம் துரிதமாக செயல்படும் திறன் கொண்டது. இதற்கு இப்போது உள்ள எந்த போர் விமானமும் நிகராக முடியாது. கடந்த 1980-கள் மற்றும் 90-களில் இந்திய விமானப்படையிடம் இருந்த மொத்த போர் விமானங்களில் மிக் ரக விமானங்களின் பங்கு 60 சதவீதமாக இருந்தது.

இப்போது உள்ள விமானப்படை பைலட்களில் 90 சதவீதம் பேர் மிக்-21 ரக (எப்.எல். 77 மற்றும் பிஐஎஸ்) விமானங்களை இயக்கி உள்ளனர்" என்றார்.

ஒலியின் வேகத்தைவிட விரைவாக பறக்கும் திறன் கொண்ட இவ்வகை விமானங்கள் விமானப்படையில் முக்கிய பங்கு வகித்தன. குறிப்பாக, வங்கதேச பிரிவினை தொடர்பாக கடந்த 1971-ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரின்போது மிக் ரக போர் விமானங்களைக் கொண்டு அந்நாட்டு ராணுவ தளவாட மையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

அது துல்லியமாக சென்று இலக்கை தாக்கியதால் பாகிஸ்தான் பணிந்தது குறிப்பிடத்தக்கது. கார்கில் போரிலும் மிக் ரக விமானங்கள் முக்கிய பங்கு வகித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in