

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பரூக் அப்துல்லா மன்னிப்பு கேட்டார்.
வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வந்த போது பரூக் அப்துல்லா கூறுகையில், ‘சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் பெண்களைப் பற்றி பேசவோ, பார்க்கவோ எனக்கு அச்சமாக இருக்கிறது. இன்றைய நிலையில் எது உன்னை சிறையில் தள்ளும் எனக் கூற முடியாது’ என்றார்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பாலியல் புகாரில் உச்ச நீதிமன்றம் அளித்த அறிக்கை குறித்து கருத்து கூறிய போது இவ்வாறு தெரிவித்தார். இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், ‘எனவேதான் ஒரு பெண்ணை என்னுடைய உதவியாளராகக் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை’ என்றார்.
அப்துல்லாவின் இந்தக் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த ஸ்மிருதி ராணி மற்றும் காங்கிரசின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அம்பிகா சோனி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அப்துல்லா மன்னிப்பு கேட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமது சர்ச்சைக்குரிய கருத்தை வாபஸ் பெறுவதாகவும், அதனால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பரூக் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பரூக்கின் மகனும் ஜம்மு-காஷ்மீர் முதல்வருமான ஒமர் அப்துல்லா, ‘சர்ச்சைக்குரிய இந்தக் கருத்தை கூறியதற்காக என் தந்தை மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
பரூக் அப்துல்லா ஏற்கனவே, ஒரு ரூபாய்க்கு ஒருவேளை சாப்பாடு கிடைப்பதாகக் கூறி சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.