

கேரள மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் 27 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக ஆகிய பிரதான கட்சிகளைச் சேர்ந்த தலா 2 பேர் அடங்குவர்.
கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கெனவே முடிந்து விட்டது. மொத்தம் 269 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 27 பேர் பெண்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகளாகவோ சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தாலும், பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 20-ஐத் தாண்டியிருப்பது இதுவே முதன்முறை.
கடந்த 2004 மற்றும் 2009 தேர்தல்களில் தலா 15 பேர் போட்டியிட்டனர். கடந்த 1999-ல் 13 பேரும், 1998, 1996 மற்றும் 1991 ஆகிய தேர்தல்களில் தலா 10 பெண் வேட்பாளர்களும் களமிறங்கியதாக தேர்தல் ஆணைய புள்ளி விவரம் கூறுகிறது.
1952, 1957 மற்றும் 1962 தேர்தல்ளில் மிகக் குறைந்த அளவாக தலா ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் அட்டிங்கல் தொகுதியில் பிந்து கிருஷ்ணாவும் ஆலத்தூர் தொகுதியில் கே.ஏ. ஷீபாவும் போட்டியிடுகின்றனர். மார்க்சிஸ்ட் சார்பில் கன்னூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பி.கே.ஸ்ரீமதியும் மலப்புரம் தொகுதியில் பி.கே.சாய்னபாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, பாஜகவின் ஷோபா சுரேந்திரன் மற்றும் கிரிஜா குமாரி, ஆம் ஆத்மியின் அனிதா பிரதாப் (பத்திரிகையாளர்), சாரா ஜோசப் (எழுத்தாளர்) ஆகியோர் குறிப்பிடத்தக்க மற்ற பெண் வேட்பாளர்கள் ஆவர். பத்தனம்திட்டா தொகுதியில் முதன்முறையாக 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கேரளாவில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளபோதிலும், அரசியலில் பெண்களின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. 1952 முதல் இதுவரை 7 பெண்கள் மட்டுமே எம்.பி. யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.