Published : 13 Mar 2014 12:00 AM
Last Updated : 13 Mar 2014 12:00 AM

மக்களவைத் தேர்தலுக்கான முதல் அறிவிக்கையை வெளியிட்டார் பிரணாப்: தமிழகத்துக்கான தேர்தல் அறிவிக்கை மார்ச் 29-ல் வெளியீடு

16-வது மக்களவைக்கான முதல் தேர்தல் அறிவிக்கையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை வெளியிட்டார். முதலாவதாக ஏப்ரல் 10-ம் தேதி பிஹாரின் 6 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான அறிவிக்கையை அவர் வெளியிட்டார்.

நிர்வாகக் காரணங்களுக்காக 3-வது கட்டத்தில் நடைபெறும் பிஹார் தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கையை முதலாவதாக குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.

தேர்தல் கால அட்டவணைப்படி அசாம், திரிபுரா மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளில் முதல் கட்டமாக ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான அறிவிக்கை மார்ச் 14-ம் தேதி வெளியிடப்படும்.

18 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான அறிவிக்கை மார்ச் 15-ம் தேதி வெளியிடப்படும். 3 மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளில் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான அறிவிக்கை மார்ச் 19-ம் தேதி வெளியிடப்படும்.

13 மாநிலங்களில் உள்ள 122 தொகுதிகளில் ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான அறிவிக்கை மார்ச் 19-ம் தேதி வெளியிட்பபடும். தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான அறிவிக்கை மார்ச் 29-ம் தேதி வெளியிடப்படும். 9 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கை ஏப்ரல் 2-ம் தேதியும், 7 மாநிலங்களில் உள்ள 64 தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கை ஏப்ரல் 12-ம் தேதியும் வெளியிடப்படும்.

கடைசி கட்டமாக 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் மே 12-ம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான அறிவிக்கை ஏப்ரல் 17-ம் தேதி வெளியிடப்படும்.- பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x