Published : 12 Nov 2013 09:45 AM
Last Updated : 12 Nov 2013 09:45 AM

மக்கள்நலப் பணியாளர்கள் பதவி நீக்கம் செல்லாது - சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் மக்கள்நலப் பணியாளர்களை பதவி நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு விடுத்த உத்தரவை திங்கள்கிழமை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

இதுகுறித்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணையில் இதை புதிய மனுவாக மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அணில் ஆர். தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அதிரடி உத்தரவிட்டனர்.

தமிழ்நாடு மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்கள்நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா, மக்கள்நலப் பணியாளர்கள் நீக்கப்பட்டது அதிமுக அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என்றார். அந்தப் பணிக்கான விளம்பரம் செய்தித்தாள்களில் முறையாக வெளியிடப்பட்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்களால் ஒவ்வொருவரும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அதிமுக ஆட்சி வந்தவுடன் திடீர் என அனைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர் என்றார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் துவேதி, ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களைத் தவிர வேறு ஆட்கள் இல்லை என்பதால் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டு வந்தது. தவிர இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை அல்ல. மேலும் மக்கள்நலப் பணியாளர்கள் சார்பில் மாநில சங்கத்தின் செயலாளர் பழனியப்பனை அழைத்து பேசி, அவருடைய ஒப்புதலின் பேரில்தான் 5 மாத சம்பளத்தொகையுடன் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என வாதிட்டார்.

தமிழக அரசின் வழக்கறிஞர், ‘நிவாரணத் தொகையாக ரூபாய் 34 கோடி அளித்திருப்பதாகவும் கூறினார்.

இதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள், இதில், ‘500 பேருக்கு மட்டும் ஏன் பிரச்சனை வந்தது?’ என கேள்வி எழுப்பினர்.

எனவே, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த உத்தரவை ரத்து செய்வதுடன், மீண்டும் மக்கள்நலப் பணியாளர்களின் மேல் முறையீட்டை புதிய மனுவாக விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இத்துடன், அந்த மனுவை தொடர்ந்து விசாரித்து, ஆறு மாத காலத்திற்குள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

வழக்கின் பின்னணி:

தமிழகத்தில், திமுக ஆட்சியின் போது 1989 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்்சி துறையின்கீழ் சுமார் 12,618 மக்கள்நலப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர். அதிமுக ஆட்சி வந்த பிறகு நவம்பர் 8, 2011-ல் திடீர் என அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த உத்தரவை ஏற்றுக் கொள்ளாத இரு சங்கங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இதை விசாரித்த அதன் நீதிபதி, தமிழக அரசின் உத்தரவை நீக்கி மக்கள்நலப் பணியாளர்களை பணி அமர்த்தும்படி கடந்த ஜனவரி 23, 2012-ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு, உயர் நீதிமன்ற அமர்விடம் மேல் முறையீடு செய்தது. கடந்த வருடம் ஏப்ரல் 26-ல் தீர்ப்பளித்த அமர்வு, தமிழக அரசு அளித்த உத்தரவு செல்லும் என்றது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு மக்கள்நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், திண்டுக்கல் மக்கள்நலப் பணியாளர் சங்கம் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பரில் மேல் முறையீடு செய்தன. அப்போது முதல் நடந்து வந்த இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களுக்கு பின் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தீர்ப்பாக அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x