

அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, அங்கு இறங்கியவுடன் இந்திய பொருளாதார வளர்ச்சி, நிலச்சட்டம் பற்றி கூறியுள்ளார்.
இந்தியப் பொருளாதாரம் 10% வளர்ச்சியை எட்டுவதற்கான பாதை சாத்தியமானதே என்று அருண் ஜேட்லி கூறினார்.
9 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் அங்கு சென்றவுடன், “10% வளர்ச்சி விகிதம் சாத்தியமே” என்று கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, “இங்குதான் இந்தியாவின் ஆற்றல் உள்ளது. கடந்த ஆண்டு பருவநிலை கடுமையாக பொய்த்த போதிலும், இந்த ஆண்டில் பயிர்சேதம் அதிகரித்த போடும் 7% வளர்ச்சியை எட்டியுள்ளோம். உற்பத்தித் துறை மெதுவே ஊர்கிறது. இதன் வளர்ச்சி விகிதம் 5% ஆக உள்ளது.
தற்போது உள்கட்டமைப்புத் துறையில் நிறைய முதலீடு செய்யப்படுகிறது, மேலும் உற்பத்தித் துறைக்கான நிதிக்கொள்கையையும் அரசு ஏற்படுத்தி வருவதால் குறிப்பிடத்தகுந்த முன்னேற்ற இந்தத் துறையில் சாத்தியமே.
இந்த ஆண்டு பருவநிலை நன்றாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம், இதனால் வேளாண் உற்பத்தி நிச்சயம் கடந்த ஆண்டை விட அதிகரிக்கும், இது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரக்கு மற்றும் சேவை வரியின் பங்களிப்பு 1% கூடுதலாக இருக்கும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியாவின் பொருளாதாரம் 7.3% என்ற விகிதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இலக்கை எட்டவேண்டும் என்பது முக்கியம், அதைவிட முக்கியமானது வளர்ச்சியை 2 ஆண்டுகளுக்குத் தக்கவைப்பது. அவ்வாறு தக்கவைத்தோமானால், அதிக வேலைவாய்ப்புகள் உட்பட பொருளாதாரம் பயன்பெற்று அடுத்த 10 ஆண்டுகளில் வறுமையின் விகிதத்தை குறைக்க முடியும் என்று நம்பிக்கை உள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எந்த விகிதத்தில் செல்லும் என்று என்னால் கூற முடியவில்லை. ஆனால், தற்போது 7.5% பொருளாதார வளர்ச்சி என்பது இந்திய ஆற்றலின் இறுதியல்ல. நடப்பு ஆண்டில் வளர்ச்சி விகிதம் 8% ஆக இருக்கும் என்று நம்புகிறோம்.
புதிய இந்திய அரசின் கொள்கை மாற்றங்கள் தாக்கம் ஏற்படுத்தத் தொடங்கி விட்டால், உள்கட்டமைப்பு, வேளாண்மை, தொழிற்துறையில் முதலீடு உணரப்படும் போது, குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி ஏற்படும் என்று நம்புகிறேன்.
பணவீக்க விகிதம் மிதமான மட்டத்தில் இருந்தால், வட்டி விகிதங்கள் குறையும் என்று ஒருவர் தர்க்கரீதியாக எதிர்பார்க்கலாம். இது நேரடியாக பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும்.
இத்தகைய நடவடிக்கைகளின் ஒருமித்த விளைவு மற்றும் உலக அளவில் ஆதரவான சுழல் இருந்தால், 8% முதல் 10% வரையிலான வளர்ச்சியை நோக்கிய பயணம் என்பது சாத்தியமில்லாத பயணம் அல்ல.
நிலச்சட்டம் ஒரு கடினமான சவால். இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சியை நோக்கியதே நிலச்சட்டம் என்று அதன் பயன்களை விளக்கி சட்டத்தை நிறைவேற்ற போராடுவோம்” இவ்வாறு கூறினார் அருண் ஜேட்லி.