Last Updated : 03 Jan, 2016 10:26 AM

 

Published : 03 Jan 2016 10:26 AM
Last Updated : 03 Jan 2016 10:26 AM

பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளபடி புதிய யோசனைகள் அரசு அதிகாரிகளுக்கு வருமா?

நாட்டின் வளர்ச்சி, மக்களுக்கு சிறந்த சேவை வழங்க புதிய யோசனைகளை தெரிவிக்கும்படி உயர் அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக அவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அவர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரையில், புதிய சிந்தனைகள், யோசனைகளை எதிர்பார்த்தால் அது மிகவும் கடினம் என்று கூறுவேன். எனினும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு வாய்ப்பு இருப்பது உண்மைதான்.

குஜராத்தில் பிரதமர் மோடியே புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கிராமப்புறங்களில் மின் விநியோகத்தை அவர் இரண்டாக பிரித்தார். வீடுகளுக்கு தொடர்ந்து மின்சாரம், விளைநிலங் களுக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட சில மணி நேரங்களில் மட்டும் மின் சாரம். இந்த எளிமையான திட்டம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இத்திட்டத்தின் மூலம் மின்சார இழப்பு (திருட்டு), மின் கட்டணம் செலுத்த நுகர்வோர் மறுத்து போராட்டம் நடத்துவது போன்ற தேவையில்லாத பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடியின் உத்தரவு குறித்து பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் டிஎன்.நினான் எழுதியுள்ளார். அதில், “புதிய, சிறந்த யோசனைகளுடன் வருவது அதிகாரிகளுக்கு மிகவும் கடினம். அதற்கு காரணம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

அவர் கூறும் போது, “சட்ட விதிமுறைகள், முன்னுதாரணங் களை பின்பற்றி செயல்படும் விதத்தில்தான் நமது அதிகாரி களுக்கு பயிற்சி அளித்திருக் கிறோம். அவர்கள் சிக்கலை, பிரச்சினைகளை தீர்க்கும் மேலாளர்கள் அல்ல. அதனால்தான் புதிய யோசனைகள் எல்லாம் பொதுவாக அரசியல்வாதிகள், நிபுணர்கள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து வரும்” என்கிறார். உதாரணமாக மானிய விலையில் அரிசி, மதிய உணவு திட்டம், தகவல் அறியும் உரிமை போன்ற திட்டங்கள் எல்லாம் வெளியாட்கள் சொன்னவைதான் என்று நினான் பட்டியலிடுகிறார்.

ஒருங்கிணைந்த வரி திட்டம் அல்லது சிறப்பான முறையில் செயல்படுத்தக் கூடிய நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஆகியவை நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் என்று ஒருவர் வாதிடலாம். ஆனால், அந்த யோசனையை நான் ஏற்கவில்லை. தனிப்பட்ட ஒருவரின் நடத்தை, ஒழுக்கத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவது அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது அல்ல. உதாரணமாக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தைக் கூறலாம்.

பிரதமர் மோடியே கூட துடைப்பத்தை எடுத்துக் கொண்டு தெருக்களை சுத்தம் செய்தார். இந்தியர்கள் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உயர்ந்ததுதான். ஆனால், அந்த நிலையைக் கொண்டு வருவது அரசின் வேலையா? நான் அப்படி நினைக்கவில்லை. இது சமூக சீர்திருத்தம். சமூகம் மற்றும் சமூகத்தில் உள்ள அமைப்புகள், மத அமைப்புகள் வழியாக இந்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அதிகாரிகளோ, அமைச்சர்களோ அல்ல. எனவேதான், மோடி எதிர்ப்பார்க்கும் பெரிய மாற்றம் அவருடைய சக்திக்குட்பட்டதாக இல்லை என்று நான் நினைக்கிறேன்.

‘இந்தியாவில் மோசமான பொருளாதாரம்’ என்ற தலைப்பில் எம்ஐடி பேராசிரியர்கள் (எஸ்தர் டப்ளோ, அபிஜீத் பானர்ஜி) ஆகியோர் புத்தகம் எழுதி உள்ளனர். அந்தப் புத்தகத்தை மோடி படிக்க வேண்டும் என்று நினான் குறிப்பிடுகிறார்.

பேராசிரியர்கள் இருவரும் தங்களது ஆய்வின் போது, மிகப்பெரிய 5 நோய் அறிகுறி களுடன் நடிகர்களை அரசு மருத்துவர்களிடம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், நோயாளிகளை அவர்கள் சரியாக பரிசோதனை செய்யவில்லை. சராசரியாக ஒரு நோயாளியை பரிசோதனை செய்ய 60 வினாடிகள் கூட எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இந்தியாவை பற்றி ஆய்வு செய்து வரும் ஹார்வர்டு கல்வியாளர் லான்ட் பிரிட்செட் என்பவர், இந்திய அரசுக்குள்ள பிரச்சினைளைப் பற்றி கூறும் போது மேலும் 2 உதாரணங்களை எடுத்துக் காட்டுகிறார்.

டெல்லியில் நீங்கள் தரகர் களுக்கு பணம் தராமல் இருந்தால், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சோதனையில் தோல்வி அடைவீர்கள். பணம் தந்து விட்டால், சோதனை இல்லா மலேயே உங்களுக்கு ஓட்டுநர் உரிமம் கிடைத்துவிடும் என்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் சட்டத்தை பின்பற்றி நடந்தால், உங்களுக்கு தண்டனை தான். சட்டத்தை பின்பற்றாவிட் டாலும் பணம் கொடுத்துவிட்டால், நீங்கள் சுதந்திரமாக வாகனம் ஓட்டலாம்.

இரண்டாவது உதாரணம் அவர் நடத்திய ஆய்வு பற்றியது. ராஜஸ்தானில் உள்ள நர்ஸ்கள் பணிக்கே வருவதில்லை. நர்ஸ்களில் பாதி பேர் வீட்டில் இருந்தபடியே மாதந்தோறும் சம்பளம் பெற்றுக் கொண்டு வேறு வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதை மாற்றி வருகையை கண்காணிக்கும் முறையை கொண்டுவர அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் தீவிர முயற்சி எடுத்தது. ஆனால், தோல்விதான் கிடைத்தது.

இவை எல்லாம் அரசுக்குள்ள பிரச்சினைகளாக நாம் பார்க்க வேண்டுமா? அல்லது இந்த சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளாக பார்க்க வேண்டுமா? என்னைக் கேட்டால் சமுதாய பிரச்சினை என்றுதான் கூறுவேன். அதனால்தான் அரசாங்கத்தால் மாற்றங்கள் கொண்டு வருவது சாத்தியமில்லை. எனினும், அரசு அதிகாரிகளால் இதை மாற்ற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x