

ஆந்திர மாநிலப் பிரிவினையை எதிர்த்து போராடி வருபவர்கள் திருப்பதிக்குச் செல்ல முயன்ற மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் காரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மீண்டும் ரேணி குண்டா விமான நிலையத்திற்கே திரும்பிச் சென்ற அமைச்சரை, போலீஸார் பாதுகாப்புடன் திருப் பதிக்கு அழைத்துச் சென்றனர்.
மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் புதன்கிழமை காலை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார். பின்னர் அவர் காரில் திருமலைக்கு புறப் பட்டுச் சென்றார். இதை அறிந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்பினர், அமைச்சர் வந்த காரை ரேணிகுண்டா செக்-போஸ்ட் அருகே வழி மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவரது கார் முன்பு சாலையில் படுத்துக்கொண்டு மறியல் போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. பின்னர் அமைச்சர் மீண்டும் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கே சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஆர்ப் பாட்டக்கார்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் திருப்பதி நகர எஸ்.பி. ராஜசேகர் பாபு தலைமையிலான போலீஸார் அமைச்சரை பாதுகாப்புடன் திருமலைக்கு அழைத்துச் சென்றனர்.