

காஷ்மீர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் மத்திய அரசும், பிடிபி-பாஜக மாநில அரசும் எந்த விதமான அமைதிக்கும் வழிவகுக்காத ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
“காஷ்மீரைப் பொறுத்தவரை எனது நிலைப்பாடு நன்றாக அறியப்பட்டதே. நான் இது குறித்து நிறைய பேசியும் எழுதியும் வருகிறேன்... மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் மாநில பிடிபி-பாஜக அரசும் செல்லும் பாதை ஆபத்தானது. இந்த வழியில் அமைதித்தீர்வு சாத்தியமில்லை, மக்களுடன் எந்த ஒரு ஈடுபாடும் காட்ட முடியாத பாதை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது, தேர்தல் அதிகாரிகளை மக்கள் துரத்தி அடிக்கின்றனர். எனவே காஷ்மீர் கொள்கையில் தீவிர மாற்றம் தேவை, பாதிப்புக்குள்ளான அனைத்துத் தரப்பினருடன் பேச்சு வார்த்தையில் உணர்வு பூர்வமாக ஈடுபடவேண்டும், ஆள்பலம், ராணுவ பலம் போலீஸ் பலம் தீர்வாகாது.
காஷ்மீரில் பிடிபி-பாஜக கூட்டணி ஆட்சி ‘புனிதமற்ற கூட்டணி’ என்று மக்களால் கருதப்பட்டு அவர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆட்சியின் கொள்கைகள்தான் காஷ்மீரின் இத்தகைய நிலமைக்குக் காரணமாகி விடுகிறது, காஷ்மீரைப் பொறுத்தவரையில் நாம் கடும் பின்னடைவு கண்டு வருகிறோம்.
பிடிபி கட்சி தனது வாக்குறுதிகளையே புறக்கணித்து வருகிறது. இதனை இருகட்சிகளும் கருத்தில் கொள்வது நலம்” என்றார் ப.சிதம்பரம்