

அரசை வீதியில் நடத்தக் கூடாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார், காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங்.
தமது கடமையைச் செய்ய மறுக்கும் டெல்லி காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியில், காவல் துறையை டெல்லி அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கோரியும் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் தர்ணா போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
இதனை விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஓர் அரசை சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்றம் மூலமாக நடத்தப்பட வேண்டும். மாறாக, எந்த நகரத்தின் வீதிகளிலும் நடத்தப்படக் கூடாது என்பதை கேஜ்ரிவால் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாட்டின் தலைநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது டெல்லி காவல் துறையின் கடமை. அவர்களது நடவடிக்கைகளில் ஆளும் ஆத்மி அரசு குறுக்கீடு செய்யக் கூடாது" என்றார் திக்விஜய் சிங்.
காங்கிரஸின் ஆதரவுடன் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வரும் நிலையில், திக்விஜய் சிங்கின் இந்த விமர்சனம் முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக, தெற்கு டெல்லியில் கடந்த வாரம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழில் நடைபெறுவதாகப் புகார் எழுந்தும், அதுகுறித்து விசாரணை நடத்த முன்வராத காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக கேஜ்ரிவால் தமது அமைச்சர்களுடன் ரயில் பவனுக்கு எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், காவல் துறையில் ஊழல் அதிகாரிகளை உடனடியாக பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.