

டெல்லியில் அரசியல் இலக்கணத்தை மாற்றி எழுதிய ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை ஆட்சிப் பொறுப்பேற்றது. இக்கட்சியின் அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் (45) முதல்வராகப் பொறுப் பேற்றார்.
ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், டெல்லியின் 7வது முதல்வராக கேஜ்ரிவால் பதவியேற்றார். அவருடன் மணீஷ் சிசோதியா (41), கிரிஷ் சோனி (49), ராக்கி பிர்லா (26), சத்யேந்திர ஜெயின் (49), சவுரப் பரத்வாஜ் (34), சோம்நாத் பாரதி (39) ஆகிய 6 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
முன்னதாக காலை 11.40 மணிக்கு மேடையின் பின்புற வாயிலை அடைந்த கேஜ்ரிவால், ஆளுநரின் வருகைக்காக அங்கு காத்திருந்தார். அவருடன் டெல்லியின் முக்கிய அதிகாரிகளும் காத்திருந்தனர். சில நிமிடங்களில் டெல்லி துணை நிலை ஆளுநரான, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் நஜீப் ஜங் காரில் வந்திறங்கினார்.
இதையடுத்து பதவியேற்பு விழா தொடங்கியது. இதற்கான உறுதி மொழியை ஆளுநர் இந்தியில் வாசிக்க,முதல் நபராக கேஜ்ரிவால் பதவியேற்றார். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவரைத் தொடர்ந்து அவரது அமைச்சர்களும் இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
இதுவரை டெல்லி முதல்வராக இருந்த 6 பேரில் மிகவும் வயதில் குறைந்த வர் அர்விந்த் கேஜ்ரிவால். இவரது அமைச்சர்களின் சராசரி வயதும் மிக குறைவு. அமைச்சர்களில் மணீஷ் சிசோதியா, ராக்கி பிர்லா ஆகிய இருவ ரும் பத்திரிகையாளர்கள். சவுரப் பரத்வாஜ், சோம்நாத் பாரதி ஆகிய இருவரும் வழக்கறிஞர்கள். சத்யேந்தர் ஜெயின் கட்டிடக்கலை நிபுணர். கிரீஷ் சோனி தொழிலதிபர் ஆவார்.
காஜியாபாத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்படும் முன் அங்கு காத்திருந்த நிருபர்களிடம் கேஜ்ரி வால் பேசினார். “இது அர்விந்த் கேஜ்ரிவா லின் பதவியேற்பு விழா அல்ல. டெல்லி யின் பாமர மனிதர்களின் பதவியேற்பு.
இதன் மூலம் நாட்டில் இன்னொரு சுதந் திரப் போராட்டம் தொடங்கியுள்ளது. இது ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்கும் போராட்டம். இதைத்தான் நாட்டு மக்கள் அனைவ ரும் விரும்புகின்றனர். பதவியேற்ற வுடன் நமது ‘ஆக் ஷன் பிளான்’ தொடங்கிவிடும்” என்றார் அவர்.
பிறகு தனது வீட்டின் அருகில் இருக்கும் கவுசாம்பி ரயில் நிலையத்தில் இருந்து தனது அமைச்சரவை சகா மணீஷ் சிதோதியாவுடன் மெட்ரோ ரயிலில் புறப்பட்டு டெல்லி பாராகம்பா நிலையம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவுள்ள மைதானத்துக்கு சிவப்பு விளக்கு இல்லாத சாதாரண காரில் வந்தார்.
பதவியேற்றபின் தனது அமைச்சர்களுடன் ராஜ்காட் சென்ற கேஜ்ரிவால், மகாத்மா காந்தி சமாதியில் மலரஞ்சலி செலுத்தினார். இதையடுத்து தலைமைச் செயலகம் சென்று தனது பணிகளை தொடங்கினார்.