

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மேற்கொண்ட தர்ணா போராட்டம் தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில், பிரிவு 186 (அரசு அலுவலர்களை கடமை செய்யவிடாமல் தடுத்தல்) மற்றும் பிரிவு 333 (கடமையில் ஈடுபட்ட அரசு ஊழியர்களைத் தாக்கி காயம் ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் நேற்றிரவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதேவேளையில், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், அடையாளம் காணப்படாத நபர்கள் என்றே முதல் தகவல் அறிக்கையில் டெல்லி காவல் துறை பதிவு செய்துள்ளது.
"ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற சாலையில் போராட்டம் நடத்தப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை முடிவில்தான் குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவர்" என்று டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, டெல்லியில் பணியாற்றும் 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக் கோரியும், காவல் துறையை நிர்வகிக்கும் பொறுப்பை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலானோர் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றத்தின் அருகே உள்ள ரயில் பவன் பகுதியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 31 பேர் படுகாயமடைந்தனர்.
காவல் அதிகாரிகள் 2 பேர் விடுமுறையில் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.