

பிரதான எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளரைத் தாக்குவதாக நினைத்து, காங்கிரஸ் பிரயோகித்த ‘டீ விற்பவர்’ என்ற வார்த்தை, தேர்தல் கால அரசியலில் பெரும்பூதமாக உருவெடுத்து நிற்கிறது.
காங்கிரஸின் தாக்குதல் வார்த்தை களையே கேடயமாகப் பயன்படுத்திக் கொண்ட நரேந்திரமோடி, “சாதாரண டீ விற்கும் பின்னணியிலிருந்து உருவானவரைக் கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது; சாதாரண மனிதர்கள் தலைமை பதவிக்கு வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை” என அதே அஸ்திரத்தைத் திருப்பி பிரயோகித்தார்.
பாஜகவின் இந்த அணுகுமுறை ரொம்பவே பிரபலமாகிவருகிறது. நமோ டீ கடை என்ற பெயரில் பாஜகவினர் ஆங்காங்கு டீ கடைகளைத் தொடங்கி, பிரபலப் படுத்தி வருகின்றனர். இதையே பிரச்சாரத்துக்கும் பயன்படுத்திக் கொண்டனர்.
பாஜக பிரதமர் வேட்பாளரின் எளிமையான பின்ணிக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத் துக்கு ஆளான காங்கிரஸ், ராகுல் காந்தியின் பெயரில் தலா இரு எழுத்துகளை எடுத்து ‘ராகா பால்’ என்றும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியினர் லாலு சாய் துக்கா (லாலு டீ கடை) என்ற பெயரிலும் டீ கடைகளைத் திறந்துள்ளனர்.
நாங்கள்தான் உண்மையானவர்கள்
லாலு பிரசாத் யாதவ் பெயரில் டீ கடை திறந்துள்ள ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியினர், மோடி சிறுவயதில் தேநீர் விற்பனையாளராக இருந்தார் என்பது பொய்யான தகவல் எனத் தெரிவித்துள்ளனர். லாலு பிரசாத்யாதவ் சிறு வயதில் மாணவனாக இருந்த போது, பாட்னாவிலிருந்த தன் சகோதரரின் தேநீர்க் கடையில் உண்மையாகவே தேநீர் விற்றார் என பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
முஸாபர்புர் பகுதியில் சாலையோர தேநீர் கடைகளைத் திறந்துள்ள ராஷ்டிரீய ஜனதா தளத்தினர், தேநீரையும் பிஸ்கட்டுகளையும் இலவசமாக விநியோகிக்கின்றனர். தேநீருடன் ஒரு விவாதம் என்ற பெயரில் மக்களுக்கு இவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த டீ கடை பிரச்சாரத்தின் பின்னணயில் உள்ள ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இக்பால் ஷமி கூறுகையில், “ஒரு மணி நேர விவாதத்தின் போது மக்களுக்கு இலவச டீயும் பிஸ்கட்டுகளும் வழங்குகிறோம். அந்த விவாதத்தில் நரேந்திர மோடி மற்றும் லாலு பிரசாத் பற்றி உண்மையான தகவல்களை மக்களுக்குச் சொல்கிறோம். இன்னும் ஏராளமான டீ கடைகளைத் திறக்கவுள்ளோம்” என்றார்.
ராஷ்டிரீய ஜனதா தளத்தின் இந்த நடவடிக்கைகளை, பிஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷீல்குமார் மோடி விமர்சித்துள்ளார். இது பணம் சம்பாதிக்கும் உத்தி. எங்கள் கட்சியின் யோசனையை, ராஷ்டிரீய ஜனதா தளம் நகலெடுத்துச் செயல்படுகிறது. நரேந்திர மோடி சிறுவயதில் ரயிலில் டீ விற்ற எளிமையான பின்னணியை அனைத்து மக்களும் அறிவார்கள். அதைப் போலவே பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களின் கவனத்தை லாலு பிரசாத்தால் ஈர்க்க முடியாது” என்றார்.
பால் விற்பனையில் காங்கிரஸ்
காங்கிரஸ் தன் பங்குக்கு பால் விற்பனை நிலையங்களைத் தொடங்கியுள்ளது. ராகுல் என்ற பெயரில் முதல் இரு எழுத்துகளையும், காந்தி என்ற பெயரில் முதல் இரு எழுத்து களையும் சேர்த்து ராகா பால் விற்பனை நிலையத்தை காங்கிரஸ் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.
போபாலில் இந்த பால் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ராகுலின் உருவம் அச்சிடப்பட்ட காகிதக் குவளைகளில், காய்ச்சிய பாலை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு காங்கிரஸ் காரர்கள் விநியோகித்தனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் முக்கியப் பிரமுகர்கள் மோனு சக்ஸேனா, மனோஜ் சுக்லா ஆகியோர் கூறுகை யில், “பாஜகவின் பிரித்தாளும் கொள்கைகளை எதிர்க்க இளைஞர்களால் தொடங்கப் பட்ட பதில் நடவடிக்கை இது” எனத் தெரிவித்துள்ளனர்.