

டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை தங்களிடம் இல்லாததால், ஆட்சி அமைக்க இயலாது என்று துணை நிலை ஆளுநரிடம் பாஜக கூறிவிட்டது. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. அங்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 இடங்களில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில், இப்போது நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 32 இடங்களும், ஆம் ஆத்மிகட்சிக்கு 28 இடங்களும், காங்கிரஸுக்கு 8 இடங்களும், ஐக்கிய ஜனதா தளம், சுயேச்சைக்கு தலா ஓர் இடமும் கிடைத்தன. பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க மேலும் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால், தான் ஆட்சி அமைக்கப் போவதில்லை. வேண்டுமானால் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கட்டும் என்று பாஜக கூறிவிட்டது. பாஜக, காங்கிரஸ் ஆகிய எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்க முடியாது. அவர்களின் ஆதரவைப் பெற்று நாங்களும் ஆட்சி அமைக்க மாட்டோம். மறுதேர்தலை சந்திப்போம் என்று ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. ஆளுநருடன் சந்திப்பு இந்நிலையில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்ஷ் வர்தனை துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்க் அழைத்தார். அவரை வியாழக்கிழமை சந்தித்த ஹர்ஷ் வர்தன், தங்களால் ஆட்சி அமைக்க இயலாது என்று தெரிவித்துவிட்டார். இதையடுத்து அங்கு மறுதேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த துணை நிலை ஆளுநர் எங்களை அழைத்தார். எங்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. எனவே, ஆட்சி அமைக்க இயலாத நிலையில் உள்ளோம். எதிர்க்கட்சியாக செயல்பட விரும்புகிறோம் என அவரிடம் தெரிவித்துவிட்டேன்" என்றார்.