

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் நிலவரம் குறித்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணி யம் அளித்த அறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் வியாழக் கிழமை விசாரணை நடந்தது. “அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் கவலை அளிக்கிறது. கோயில் நிர்வாகம் முழுமையாக செயலிழந்து விட்டது. இந்த நிர்வாகம் தொடர அனுமதிக்க முடியாது,” என்று நீதிபதிகள் லோதா மற்றும் பட்னாயக் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: “கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க திருவ னந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமை யில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், தலைமை தந்திரி, தலைமை நம்பி மற்றும் அவர்க ளால் நியமிக்கப்படும் இருவர் உறுப் பினர்களாக இருப்பர். இதில், ஒருவர் கேரள மாநில அரசின் ஆலோசனையுடன் நியமிக்கப்பட வேண்டும். பொக்கிஷ அறை களின் சாவிகளை நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும். அங் குள்ள தங்கம், வைர ஆபரணங் கள், உண்டியல் வருமானம் ஆகிய வற்றை கணக்கிட்டு பராமரிக்கும் பணியை முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் மேற்கொள்வார்.
உண்டியல் வருமானம் வாரந்தோறும் சனிக்கிழமை நீதிபதி தலைமையில் எண்ணப்பட்டு கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.
தற்போதுள்ள கோயில் நிர்வாக அதிகாரி நான்கு மாத விடுப்பில் செல்ல வேண்டும். அவருக்குப் பதில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சதீஷ் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்வார். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக நீதிபதி குழு மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கும் விஷயத்தில், வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம், கேரள அரசு வழக்கறிஞர் விஸ்வநாதன், திருவிதாங்கூர் அறக்கட்டளை தரப்பு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
முக்கிய முடிவுகள் எடுக்கும்போது திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த அறங்காவலரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.