ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்: குஜராத் முதல்வராக விஜய் ருபானி இன்று பதவியேற்பு

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்: குஜராத் முதல்வராக விஜய் ருபானி இன்று பதவியேற்பு
Updated on
1 min read

குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பாஜக தலைவர் விஜய் ருபானி, நேற்று ஆளுநர் ஒ.பி.கோலியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து இன்று அவர் முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் ஆனந்திபென் ராஜினாமா செய்ததை தொடர்ந்து நேற்று முன் தினம் நடந்த கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த விஜய் ருபானி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர் என்பதால் நிதின் படேலுக்கு பதிலாக இவர் முதல்வர் பதவிக்கு தேர்வானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஆளுநர் ஒ.பி.கோலியை சந்தித்து விஜய் ருபானி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை தொடர்ந்து இன்று நடக்கவுள்ள பதவியேற்பு விழாவில் ருபானி முதல்வராக பதவியேற்கிறார். ஆளுநருடனான சந்திப்பின்போது ஆனந்திபென் படேல் உடன் வராததால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

யார் இந்த ருபானி

ரங்கூனில் (தற்போதைய யாங்கூன், மியான்மர்) 1956-ல் பிறந்த ருபானி பின்னர் பெற்றோருடன் ராஜ்கோட்டில் குடிபெயர்ந்தார். பள்ளி பருவத்திலேயே ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்து, 1971-ல் பாஜகவில் ஐக்கியமானார். பின்னர் கட்சியின் பல்வேறு பதவிகளை வகித்த ருபானி 2014-ல் ராஜ்கோட் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். கடைசியாக கடந்த பிப்ரவரி 19-ல் மாநில பாஜக தலைவர் பதவிக்கு உயர்ந்து இன்று முதல்வராக பொறுப்பேற்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in