Last Updated : 17 Feb, 2017 08:23 PM

 

Published : 17 Feb 2017 08:23 PM
Last Updated : 17 Feb 2017 08:23 PM

உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் யாருடனும் கூட்டணி இல்லை: மாயாவதி திட்டவட்டம்

உ.பி. சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் யாருடனும் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைக்க பாஜகவுடன் கூட்டணி சேருவார் என எழுந்துள்ள புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் மாயாவதி இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 11-ல் துவங்கி உ.பி.யின் ஏழு கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்கு ஆளும் கட்சியான சமாஜ்வாதி, காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்த பின் அதன் ஆதரவு வலுத்திருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால், மத்தியில் ஆளும் தலைமை கட்சியான பாஜகவுடன் அதற்கு கடும் போட்டி நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக முக்கியப் போட்டியாளர்களில் ஒருவரான பகுஜன் சமாஜ், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்துடன், உ.பி. தேர்தலில் எவருக்கு தனிமெஜாரிட்டி கிடைக்கவில்லை எனில், ஆட்சி அமைக்க வேண்டி பாஜகவுடன் சென்று விடுவார் என மாயாவதி மீது புகார் கிளம்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் சமாஜ்வாதியை சமாளிக்க உ.பி.யின் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மாயாவதி அதை உறுதியாக மறுத்துள்ளார்.

இது குறித்து மாயாவதி பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், ''முதல்கட்ட தேர்தலில் எங்களுக்கு தனிமெஜாரிட்டி கிடைக்கும் என்ற சமிக்ஞை கிடைத்துள்ளது. ஒருவேளை தனிமெஜாரிட்டி கிடைக்காத நிலையில் நாம் என்ன செய்வோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆட்சிக்காக தேர்தலுக்கு பின் கூட்டணி அமைப்பதை விட எதிர்வரிசையில் அமர்வதையே விரும்புகிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

உ.பி.தேர்தலில் இந்தமுறை முஸ்லிம் வாக்குகளை நம்பி பகுஜன் சமாஜும் இறங்கியுள்ளது. மொத்தம் உள்ள 403-ல் சுமார் 140 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் வெற்றியை நிர்ணயிப்பதாகக் கருதப்படுகிறது. முஸ்லிம்கள் உ.பி.யின் 18 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருப்பதால், மற்ற கட்சிகளை விட அதிகமாக 104 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார் மாயாவதி. உ.பி. முதல்வரான அகிலேஷ்சிங் யாதவ் அவரது யுக்தியை முறியடிக்க, தேர்தலுக்கு பின் மாயாவதி பாஜகவுக்கு ஆதரவளித்து விடுவார் எனப் புகார் கூறி வருகிறார்.

இதை சமாளிக்க மாயாவதி, முஸ்லிம்களை ஆதரிக்கும் உண்மையான கட்சி எனதே எனவும், அவர்கள் விசுவாசத்தை எந்த சமயத்திலும் வீணாக்கப் போவதில்லை என்றும் உறுதி அளித்து வருகிறார். அகிலேஷ் ஆட்சியில் சுமார் 500 மதக்கலவரங்கள் நடந்ததாகவும், கிரிமினல்களின் நடமட்டத்தில் காட்டுத் தர்பார் ஆட்சி நிலவுயதாகவும் குற்றம் சுமத்தி உள்ளார். பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் விமர்சனம் செய்த மாயாவதி, தவறான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதில் மோடி கில்லாடி என்றும் கூறியுள்ளார்.

மாயாவதி 2002-ல் தலா ஆறு மாதம் என பாஜகவுடன் கூட்டணி பேசி முதல்வராக இருந்தார். ஆறு மாதத்திற்குப் பின் பாஜகவை வர விடாமல் ஆட்சியை கலைத்து தேர்தலுக்கு வழிவகுத்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு உ.பி. தேர்தலின் போது நிலவிய நான்கு முனைப்போட்டியில் மாயாவதி தற்போது போல், மூன்றாவது நிலையில் கருதப்பட்டார். ஆனால், முடிவுகள் வெளியான போது அவர் தனிமெஜாரிட்டியில் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x