

நரேந்திர மோடியை துண்டு துண்டாக்குவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் பேசியது தவறானது, அவரின் பேச்சு காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிரானது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம் சஹரான்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத், உத்தரப் பிரதேசத்தை குஜராத் போல் மோடி மாற்ற முயன்றால் நாங்கள் அவரை துண்டு துண்டாக்குவோம் என்று பேசினார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
சஹரான்பூரை புறக்கணிக்காத ராகுல்
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் நேற்று பிரசாரப் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சஹரான்பூரிலும் பேசுவதாக இருந்தது. இம்ரான் மசூத் விவகாரத்தால் அவர் சஹரான்பூர் கூட்டத்தைப் புறக்கணிப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் காஜியாபாத் கூட்டத்தை முடித்துக் கொண்டு ஏற்கெனவே திட்டமிட்ட படி சஹரான்பூர் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். பொதுக்கூட்ட மேடையில் இம்ரான் மசூத்தின் மனைவி ஷைமா அமர்ந்திருந்தார்.
முன்னதாக காஜியாபாத் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
மசூத் இவ்வளவு கடினமான வார்த்தை களால் பேசியிருக்கக்கூடாது. அவரது பேச்சு காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிரானது. காங்கிரஸ் கட்சியில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளனர். நாங்கள் எப்போதும் கோபம் கொள்வது கிடையாது. எங்களது பணிகளை அமைதி, அன்புடன் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
சஹரான்பூர் பொதுக்கூட்டத்திலும் ராகுல் காந்தி இதே கருத்தைத் தெரிவித் தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் போன்று காங்கிரஸ் தலைவர்கள் ஆத்திரப்பட்டு பேசுவது கிடையாது என்று அவர் கூறினார்.
வேட்பாளர் மாற்றம்?
மோடிக்கு எதிரான மோசமான விமர்சனத்தால் சஹரான்பூர் தொகுதி வேட்பாளர் இம்ரான் மசூத் மாற்றப்பட்டு புதிய வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.