விஐபி கவனிப்பை மறுத்த ஜெயலலிதா- சிறை அதிகாரிகளை வியக்கவைத்த அணுகுமுறை

விஐபி கவனிப்பை மறுத்த ஜெயலலிதா- சிறை அதிகாரிகளை வியக்கவைத்த அணுகுமுறை
Updated on
1 min read

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

சிறையில் ஜெயலலிதா தனக்கென சொகுசு வசதிகள் ஏற்படுத்தித் தருமாறு எவ்வித நிபந்தனையும் வைக்கவில்லை என சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவர் ஜெயலலிதாவின் வியக்கவைத்த அணுகுமுறை குறித்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெய்சிம்ஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மேடம் ஜெயலலிதா எவ்வித வி.ஐ.பி வசதியும் கோரவில்லை. பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள மற்ற கைதிகளைப் போலவே அவரும் நடத்தப்படுகிறார்.

சிறைக்காவலர்கள், அதிகாரிகளிடம் அவர் மிகவும் நாகரிகமாக நடந்து கொள்கிறார். மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் இரும்புக் கட்டில் வேண்டும் என கேட்டார். அது மட்டுமே அவர் முன்வைத்த கோரிக்கை. தொலைக்காட்சி வசதிகூட அவர் கேட்கவில்லை.

ஜெயலலிதா கடுங்காவல் தண்டனை பெற்றவர் இல்லை என்பதால் அவர் விருப்பப்படியே அவரது உடைகளையே அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே மகிழ்ச்சியுடன் அவர் சேலை உடுத்தியிருக்கிறார். மற்ற எந்த ஒப்பனைகளையும் அவர் செய்து கொள்ளவில்லை.

ஜெயலலிதாவுடன் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, இளவரசி ஆகியோரும் அடுத்தடுத்த அறைகளிலேயே இருப்பதால் அவர்கள் இருவரும் ஜெயலலிதாவை கவனித்துக் கொள்கின்றனர்.

உணவு முறையை பொருத்தவரை அவர் பால், பிஸ்கெட், பிரவுன் பிரெட், சப்பாத்தி போன்றவற்றையே உட்கொள்கிறார். செய்தித்தாள்களை வாசிக்கிறார். தவறாமல் மூன்று ஆங்கில நாளிதழ்களை தினமும் அவர் வாசிக்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in