ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை: மூட்டை, மூட்டையாக பறிமுதல்

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை: மூட்டை, மூட்டையாக பறிமுதல்
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தில் விளைச் சலாகும் நெல்லூர் அரிசி, சோனா மசூரா உள்ளிட்ட ரகங்கள் பிரபலம். ஆனால், தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்து வரும் அரிசியைக் கண்டாலே பொது மக்கள் அலறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக ‘பிளாஸ்டிக்’ அரிசி தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. முதலில் ஹைதராபாத் நகரில் இந்தப் பேச்சு அடிபட்டது. பிளாஸ்டிக் அரிசி சமைக்கப்பட்டதும், இதில் இருந்து வரும் கஞ்சி ஒரு வகையாக பிளாஸ்டிக் வாடை வருகிறது எனக் கூறப்பட்டது.

இதனை உறுதி செய்யும் வகையில், இந்த வகை சாப்பாட்டை சாப்பிட்ட சிலர் அஜீரண கோளாறு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது குறித்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், கம்மம், நல்கொண்டா, மேதக் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் வருவாய் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, சந்தேகத்துக்கு இடமான அரிசியை மூட்டை மூட்டையாகப் பறிமுதல் செய்து, அதனை ஆய்விற்கு அனுப்பி உள்ளனர். இதில் அரிசியின் எடையை அதிகரிக்க ஒருவகை பிளாஸ்டிக் பொருள் கலந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கந்துகூரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் புகாரின்பேரில் வட்டாட்சியர், போலீஸார் கூட்டாக அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து 50 அரிசி மூட்டைகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல் விசாகப்பட்டினம் உழவர் சந்தையில் உள்ள மொத்த வியாபார அரசி கடை ஒன்றிலும் சோதனை நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in