Last Updated : 17 Dec, 2015 02:21 PM

 

Published : 17 Dec 2015 02:21 PM
Last Updated : 17 Dec 2015 02:21 PM

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரம்: அருண் ஜேட்லிக்கு ஆம் ஆத்மி நெருக்குதல்

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, அதன் தலைவராக இருந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கடும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை மேற்கொள்ளப்பட்டது டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விசாரணை தொடர்பான கோப்புகளுக்காகவே என்று ஆம் ஆத்மி திட்டவட்டமாக கூறிவருகிறது. டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜேட்லி 13 ஆண்டுகாலம் பதவி வகித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லி மாநில அரசு அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கையுடன் ஆம் ஆத்மி தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “ஒரே முகவரி, ஒரே இ-மெயில் ஐடி மற்றும் ஒரே இயக்குநர்கள் அடங்கிய 5 நிறுவனங்களுக்கு பணம் கைமாறியுள்ளது. ஸ்டேடியத்தின் ஒரு பகுதியை கட்டமைக்க டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு ரூ.24 கோடி பெற்றது, பின்பு ரூ.114 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.90 கோடி எங்கே போனது? மேலும் மாநகராட்சி அனுமதியையும் பெறவில்லை” என்று கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

ஏகப்பட்ட புகார்கள் வந்ததாக தெரிவித்த ஆம் ஆத்மி, அதன் பிறகே விசாரணை கமிட்டி அமைத்ததாக கூறுகிறது.

ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தா கூறும்போது, “அணித் தேர்வாளர்களை அருண் ஜேட்லி எந்த வித விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் நியமித்துள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்கத்தையே செல்வாக்கு மிக்கவர்களுக்கான இடமாக மாற்றியுள்ளார் ஜேட்லி. அங்கு சாமானிய மனிதர்களுக்கு இடமில்லை” என்று சாடினார்.

மேலும் நிறுவனம் ஒன்றிற்கு ரூ.1.55 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் கடன் வழங்கப்பட்டதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. "ஒரு வேலையும் செய்யாத நிறுவனங்களுக்கு பணம் அளிக்கப்பட்டுள்ளது, டெண்டர் நடைமுறைகளை அருண் ஜேட்லி கடைபிடிக்கவில்லை" என்று ஆம் ஆத்மி கட்சியின் அஷுதோஷ் தெரிவித்தார்.

இதனையடுத்து ஜேட்லி ராஜினாமா செய்தால்தான் இது பற்றிய நியாயமான விசாரணை நடைபெற முடியும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தை தற்போது காங்கிரஸ் தன் கையில் எடுத்துள்ளது. அருண் ஜேட்லி தலைமைப் பொறுப்பில் இருந்த காலக்கட்டத்தில்தான் இந்த ஊழல்கள் நடைபெற்றுள்ளது என்று சாடிய காங்கிரஸ், அவரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x