

காஷ்மீரில் தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்த ராணுவ வீரர் உமர் பயஸ் குடும்பத்துக்கு, ரூ.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. அத்துடன் ராணுவப் பள்ளிக்கும் உமர் பயஸ் பெயர் சூட்டப்பட்டது.
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உமர் பயஸ் (23). ஜம்மு பகுதியில் ராஜ்புதனா ரைபிள்ஸ் படை பிரிவில் லெப்டினனட்டாகப் பணியாற்றினார். கடந்த 9-ம் தேதி செவ்வாய்க்கிழமை, சொந்த ஊரில் நடக்க இருந்த உறவினர் திருமணத்தில் பங்கேற்க குல்காம் சென்றார். அப்போது அவரை ஹிஸ்புல் முஹாகிதீன் தீவிரவாதி கள் கடத்திக் கொலை செய்தனர். மறுநாள் புதன்கிழமை அவரது உடல் குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட உமர் பயஸின் குடும்பத்தினருக்கு, ராணுவ வீரர்கள் காப்பீட்டு நிதியில் இருந்து ரூ.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் ராஜ்புதனா ரைபிள்ஸ் படைப்பிரிவு சார்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலை நேற்று வழங்கப்பட்டது. இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் கலியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொல்லப்பட்ட வீரர் உமர் பயஸ் குடும்பத்தினரை ‘விக்டர் போர்ஸ்’ படைப் பிரிவின் மேஜர் ஜெனரல் பி.எஸ்.ராஜு மற்றும் ராணுவ அதிகாரிகள் சனிக்கிழமை சந்தித்தனர். அப்போது காசோலைகளை நேரில் வழங் கினர். மேலும், உமர் பயஸை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ராணுவம் எப்போதும் துணையாக இருக்கும் என்றும், அவர்களது குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை செய்யும் என்றும் மேஜர் ஜெனரல் ராஜு உறுதி அளித்தார்.
இவ்வாறு செய்தித் தொடர் பாளர் ராஜேஷ் கலியா கூறினார்.
காஷ்மீரில் இயங்கி வரும் ராணுவப் பள்ளிக்கும் உமர் பயஸின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாக். அத்துமீறல்
காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்ட இணை ஆணையர் ஷாஹித் இக்பால் சவுத்ரி கூறும்போது, ‘‘நவ்ஷேரா பகுதியில் எல்லைக்கு அப்பால் இருந்தபடி பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாய மடைந்தனர். தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருவதால் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள குக்கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.