Last Updated : 08 Jun, 2017 02:53 PM

 

Published : 08 Jun 2017 02:53 PM
Last Updated : 08 Jun 2017 02:53 PM

மாட்டிறைச்சி தடை சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்

மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக எம்.எல்.ஏ., ஓ.ராஜகோபால் தவிர அனைவருமே தீர்மானத்தை ஆதரித்தனர்.

கடந்த மே 23-ம் தேதி பசு, காளை, எருமை மாடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் வாங்கவோ விற்கவோ கூடாது என்று புதிய உத்தரவை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்தது.

இது நாடெங்கும் எதிர்ப்பலைகளைக் கிளப்பியது. குறிப்பாக கேரள மாநிலம் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 8-ல் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதாக கேரள அரசு அறிவித்தது.

அறிவித்தபடி இன்று (வியாழக்கிழமை) கேரள சட்டப்பேரவையில் சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தத் தீர்மானத்தை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சியும் எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியும் ஏகமனதாக ஆதரித்தன.

பாஜக எம்.எல்.ஏ., எதிர்ப்பு:

"மத்திய அரசை குறிவைத்தே கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இது சட்டப்பேரவை உரிமைகளை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகும். மலிவான அரசியல் ஆதாயத்துக்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் இறைச்சி விற்பனையை தடை செய்வதாகக் கூறப்படவில்லை. மேலும், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை வரவேற்பதாகவும் தேவைப்பட்டால் மாட்டிறைச்சி தடை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல்வேறு வழிகளும் இருக்கும்நிலையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் என்னவிருக்கிறது. இதை அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்லிவிட முடியும்" என பாஜக எம்.எல்.ஏ., ஓ.ராஜகோபால் கூறினார்.

விவாதத்தை தொடங்கிவைத்த அச்சுதானந்தன்:

கேரள சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தை முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் தொடங்கிவைத்தார். அவர் பேசும்போது, "மாட்டிறைச்சி தடை சட்டம் ஒரு தேசிய சோகம். இச்சட்டத்தின் மூலம் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் சக்திகள் கைகளில் கால்நடை வர்த்தகத்தை அளிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது" என்றார்.

தனிநபர் சுதந்திரத்தின் மீதான அத்துமீறல்:

எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறும்போது, "உணவு என்பது தனிநபர் உரிமை சார்ந்தது. தனிநபர் உரிமையை அத்துமீறுவதும் ஒருவகை துல்லிய தாக்குதலே. மத்திய அரசின் இந்த அறிவிப்பாணை இனிப்பு தோய்த்த விஷம். ஆர்.எஸ்.எஸ்., - பாஜக கொள்கை திணிக்கப்படுகிறது" என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் எம்.கே.முனீர் கூறும்போது, "அரசியல் ஆதாயத்துக்காக எல்லாப் பிரச்ச்சினைகளுக்கும் மதச்சாயம் பூசும் கட்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் பலரும் தங்கள் வாதங்களை முன்வைக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x