

உத்தரப் பிரதேசத்தில் ஐந்தாம் கட்டமாக 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. ஐந்தாம் கட்டமாக இன்று 11 மாவட்டங்களைச் சேர்ந்த 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒரு கோடியே 84 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
ஐந்தாம் கட்ட தேர்தல் அட்ட வணையில் ஆலாபூர் தொகுதியும் இடம்பெற்றிருந்தது. அந்த தொகுதி சமாஜ்வாதி வேட்பாளர் சந்திரசேகர் மரணம் அடைந்ததால் மார்ச் 9-ம் தேதிக்கு வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் 37 தொகுதிகள் சமாஜ்வாதி வசம் உள்ளன. அந்த தொகுதிகளை தக்க வைத்து கொள்ள சமாஜ்வாதி தீவிர பிரச்சாரம் செய்துள்ளது.
அமேதி மக்களவைத் தொகுதி யின் எம்.பி.யாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளார். அந்த மக்களவைத் தொகுதியில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றின் முடிவுகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமேதி தொகுதியில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சஞ்சய் சிங்கின் 2 மனைவிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவு கிறது. சஞ்சய் சிங்கின் முதல் மனைவி கரிமா சிங் பாஜக வேட் பாளராகவும் 2-வது மனைவி அமிதா சிங் காங்கிரஸ் வேட் பாளராகவும் போட்டியிடுகின் றனர். இவர்கள் உட்பட 51 தொகுதிகளில் மொத்தம் 608 வேட்பாளர்கள் களத்தில் உள்ள னர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
வாக்குப்பதிவு நடைபெறும் 5 மாவட்டங்கள் நேபாள மாநில எல்லையில் அமைந்துள்ளன. அங்குள்ள பல வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.