

மாநிலங்களவையில் அமைச்சர்கள் நேரிலும் எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:
55 ஆயிரம் கிராமங்களுக்கு மொபைல் சேவை
தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா:
இந்தியாவிலுள்ள 5.97 லட்சம் கிராமங்களில் 5.41 லட்சம் கிராமங்களுக்கு மொபைல் இணைப்பு உள்ளது. எஞ்சிய 55,669 கிராமங்கள் மொபைல் போன் வசதியால் இணைக்கப்படவில்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அந்த கிராமங்களும் இணைக்கப்படும். அதிகபட்சமாக ஒடிசாவில் 10,398 கிராமங்களும், தொடர்ந்து ஜார்க்கண்டில் 5,949, மத்தியப் பிரதேசத்தில் 5,926, மகாராஷ்டிரத்தில் 4,792, சத்தீஸ்கரில் 4,041, ஆந்திராவில் 3,812, அருணாசலப்பிரதேசத்தில் 2,886, பிஹாரில் 2,534 கிராமங்கள் மொபைல் போன் இணைப்பு வசதி இல்லாதவை. ஊரகம், தொலைதூரப் பகுதிகளில் தொலைபேசி சேவைகளை விரிவுபடுத்துவதற்கு தொலைத்தொடர்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இடதுசாரி தீவிரவாதம் பாதித்த வடகிழக்கு மாநிலங்களில் ரூ.3,567.5 கோடி மதிப்பில் செல்போன் கோபுரங்களை அமைத்து வருகிறது.
4,432 நீதிபதி பணியிடம் காலி
சட்டம், நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்:
கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, துணை நிலை நீதிமன்றங்களில் நீதிபதிகள், நீதித்துறை அலுவலர்களின் பணியிட எண்ணிக்கை 20,502. இவற்றில் 4,432 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. துணை நிலை நீதிமன்றங்களின் நிலைமையை மேம்படுத்துவதில் அரசு அக்கறை காட்டி வருகிறது. இதன் ஒருபகுதியாக 2,447 புதிய நீதிமன்ற அறைகள் கட்டப்பட்டு வருகிறன்றன. தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி மத்தியில் பொறுப்பேற்றதிலிருந்து, நீதித்துறை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ.1,900 கோடி ஒதுக்கியுள்ளது.