

குஜராத் மாநிலம் கிர் சரணாலயத்தில் சிங்கங்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஜூன் மாதம் கிர் காடுகளுக்கு மனைவியுடன் சென்ற ரவீந்திர ஜடேஜா, அங்கு சட்டத்தை மீறி சிங்கங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு அதனை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார், இது வைரலானது வேறு கதை, இப்போது இது அபராதத்திற்குரிய குற்றம் என்பதால் ரூ.20,000 அபராதம் விதித்தது குஜராத் வனத்துறை.
ஜடேஜா தற்போது மே.இ.தீவுகளில் இருப்பதால், அவரது மாமனார் ஹர்தேவ்சிங் சோலங்கி அபராதத் தொகையை செலுத்தினார்.
ஜடேஜா எடுத்த செல்ஃபிக்களில் ஒன்றில் அவரும் அவர் மனைவியும் தரையில் அமர்ந்திருக்க பின்னால் மரத்தடியில் சிங்கம் இருந்தது. இன்னொரு படத்தில் ஜடேஜா சிங்கங்களை கை காட்டுகிறார். சில புகைப்படங்களில் வனத்துறை அதிகாரியும் ஜடேஜா-ரீவா தம்பதியினர் அருகில் இருப்பதும் தெரியவந்தது.
அபராதம் வேறு, விசாரணை அறிக்கை வேறு, விசாரணை அறிக்கை உயரதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது என்று குஜராத் வனத்துறை தெரிவித்துள்ளது. வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.