Last Updated : 17 Sep, 2016 03:50 PM

 

Published : 17 Sep 2016 03:50 PM
Last Updated : 17 Sep 2016 03:50 PM

மோடி வருகைக்கு முன் குஜராத் தலித் தலைவர் ஜிக்னேஷுக்கு தடுப்புக் காவல்

பிரதமர் மோடி தனது 66-வது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு நாள் பயணமாக குஜராத்துக்குச் செல்வதற்கு சில மணி நேரங்கள் முன்பாக, தாழ்த்தப்பட்டவர்கள் உரிமைக்கான தலைவர் ஜிக்னேஷ் மேவானியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத் போலீசார் தடுப்புக் காவலில் கைது செய்தனர்.

நடந்த சம்பவம் குறித்து சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜிக்னேஷுன் சகோதரர் விரால் மேவானி, "15 முதல் 20 போலீஸார், ஜிக்னேஷை பிடித்து இழுத்துச் சென்றனர். அவர் டெல்லியில் இருந்து அப்போதுதான் வந்திருந்தார். என்னைப் பார்த்துக் கையசைத்துவிட்டு, விமான நிலையத்தின் வெளிவாயிலை நோக்கி நடந்தார். என் அருகில் வரும்போதே அவரைப் போலீஸார் பிடித்துச் சென்றனர். இந்த மாதிரியான செயல் சட்டவிரோதமானது" என்று கூறியிருக்கிறார்.

போலீஸார் ஜிக்னேஷை, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் விடுவித்ததாகத் தகவல்கள் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேரணியில் பங்கேற்பு

டெல்லியில் இருந்து அகமதாபாத் வருவதற்கு முன்னர் ஜிக்னேஷ் மேவானி, தலித் பேரணி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். பி.ஆர். அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் உரையாற்றிய இப்பேரணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உட்பட ஏராளமான இடதுசாரி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அப்பேரணியில் பேசிய ஜிக்னேஷ், நாடு முழுவதிலும் ரயில் மறியல் போராட்டத்திலும், சங்கிலி இழுப்புப் போராட்டத்திலும் கலந்துகொள்ளுமாறு தலித்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் பேசிய அவர், போராட்டங்கள் பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது போட்டியிட்ட தொகுதியான அகமதாபாத், மணிநகரில் இருந்து தொடங்க வேண்டும் எனவும், போராட்டம் காந்தி ஜெயந்திக்கு ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 1-ல் தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதே நேரத்தில் ஜிக்னேஷ் குஜராத்தில் ரயில் மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் அடிக்கடி நடக்கும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x